Tuesday, 4 July 2017

தீக்குளிக்காத விட்டில்கள்-4

தீக்குளிக்காத விட்டில்கள்-4
பள்ளிகொண்டாவிலே உத்திர ரங்கநாத சுவாமிக்குப் புஷ்பப் பல்லக்கு! சுற்றுப்புறக் கிராமங்களிலிருந்தெல்லாம் திருவிழாக் கூட்டம் வந்து சேரும். வானவேடிக்கை உண்டு. வேலூரிலிருந்து மெல்லிசைக் கச்சேரி. தேர் போக வழி ஆயத்தம் செய்ய மின்சாரக் கம்பத்தின் உயரங்களில் வயர்மேன்கள் ஏறி தெருத் தெருவாக மின்கம்பி வயர்களை உயரத்தூக்கிக் கொண்டிருந்தனர். வெவ்வேறு கூடுகளுக்குப் பறந்துபோய் சொந்த ஊரில் திருவிழாவில் கூடுகிற எல்லோரையும் போல் ராதாவும் வந்திருந்தாள். காப்டன் ஹயக்ரீவனும் வந்திருந்தார்.
“மாப்பிள்ளைக்குத் தூத்தம் கொண்டு போ... டேய்..., அத்திம்பேர் இருக்கச்சே சினிமா பாட்டை கத்திண்டிருக்கப்படாது... அம்மா... ராதா, இந்த நாற்காலியைக் கொண்டுபோய் அவர் ரூமிலே போடு... நேக்கு ஈஸிசேர் போறும்...”
அப்பா தன் சிம்மாசனத்தைக் கூட விட்டுக் கொடுத்துவிட்டார். அந்த சிறிய, எளிய வீடு, காப்டன் ஹயக்ரீவன் வருகையால் அக்ரஹாரத்தில் ஒரு சமூக முக்கியத்துவம் பெற்றதில் பூரித்துக்கொண்டிருந்தது.
அவள் முன்கூட்டியே எச்சரிக்கை கொடுத்திருந்தாள்.
“காப்டன்... ஊரிலே வந்து விஸ்கி பாட்டிலைத் தேடப்படாது. நாம போறது புஷ்பப் பல்லக்குக்கு. பரம வைதீகமான நரசிம்மாச்சாரியர் ஆத்திலே டிஸிப்ளின்...! கிருஷ்ணமாச்சாரியார் ஆத்திலே இன்னிய தேதிவரை விஸ்கி பாட்டிலே நொழஞ்சது கிடையாது.”
“ஆஸ் பெர் யுவர் ஆர்டர்ஸ் மாடம்.”
“காப்டன்... ஒன் மோர் திங். பட்டு உடுத்திண்டுதான் நடமாடணும்.”
“உத்தரவு.”
காப்டனுக்கு ‘எடீக்வெட்’ டெல்லாம் போதித்து விட்டுத்தான் ராதா உடன் வந்தாள்.
வயதான கணவர்கள்எல்லோரையும்போல் காப்டன் ஹயக்ரீவனும் தம் இளம் வயது மனைவியின் திருப்தியில், அவளை மகிழ்ச்சியாக வைத்திருப்பதில் அதிக சிரத்தைக் காட்டினார்.
ஆற்றிலே தண்ணீர் இல்லை. கோடையின் கண்ணாடிப் பரப்பில் ஆற்றின் வெற்று மணல் வெளி...! கண் புத்து விடுவதுபோல் ஜொலித்தது. ஷில்லாங்கிலிருந்து மூன்று நாள் பயண அலுப்பை சகித்துக்கொண்டு இந்த வெயிலையும், இங்கே நிலவும் வெறுமையையும் சகிக்க ராதா பள்ளிகொண்டா வந்ததற்குக் காரணம், புஷ்பப் பல்லக்கு மட்டும் அல்ல, கண்ணன்...! அவனைப் பார்க்கவேண்டும். அவன் என்ன ஆனான்? எப்படி இருக்கிறான்?
காப்டன்... நான் ஒரு நடத்தை கெட்ட மனைவி அல்ல. ஐ ஆம் சின்ஸியர் டு யூ...! ஐம் நாட் அப்ஸொல்யூட்லி டெடிகேட்டட்...! அப்படியிருந்தா ரொம்ப நன்னாருக்குதான். இட்ஸ் இம்பாஸிபிள்... காரணம் அப்படி இருக்கறதுன்னா... என்னன்னு உங்களுக்கே தெரியாது, எடுத்துச் சொன்னா அது தேலையில்லே... அது வெறும் பார்மாலிட்டிம்பேள்...
அக்கரையிலே ஹைதர்புரத்திற்கும் வேப்பூருக்கும் அப்பால் குடியாத்தம் வரியாக ரயில்கள் ஓடிக்கொண்டிருக்கின்றன. ராதா தவறவிட்ட ரயிலை நினைவூட்டிக் கொண்டே அவை ஓடுகின்றன. கண்ணன் எங்கே? ராதா டைப்ரைட்டிங் இன்ஸ்டிடியூட்டிற்குப் போய் வந்தாள். பொறுமையோடு... பாவிலே அறுந்த நூலிழைகளை இழந்துவிட்ட தங்கள் இறந்த காலங்களைக் கண்ணொளி மங்கியபடி தேடி விளக்கிக் கொண்டிருந்த செங்குந்தர் வீதி வழியே... நெசவாளர் மத்தியிலே நடந்து..., ஈஸ்வரன் கோயிலைச் சுற்றிக்கொண்டு லீனாலைப் பார்க்கப் போனாள். பேச்சு வாக்கிலாவது கண்ணனைப் பற்றித் தெரிந்துகொள்ள முடிகிறதா என்று...! 
எல்லோருமே அவளை ஒரு மாதிரி பார்த்தார்கள். அவளுக்கும் கண்ணனுக்கும் இருந்த எதையோஅறிந்தவர்கள்போல..., ஒருவேளை அது தன் கற்பனையா? நடந்துகொண்டே போனபோது தோள்மீது ஆதுரமாக ஒரு கை வந்து விழுந்தது.
லீனா கேமரான் பேட்டைக்காரி; கிறிஸ்துவப் பெண்; பள்ளித் தோழி; கண்ணனோடு படித்தவள்; அவனுக்கும் ராதாவுக்குமான உறவு மொட்டுவிடும் முன்பே ஊகித்தவள்; பின்பு அதன் ஒவ்வொரு வடிவத்தையும், பரிமாணத்தையும் அறிந்துகொண்டு அதற்குத் தன்னால் முடிந்த அறிவுரை ஆலோசனைகளைச் சொன்னவள்.
“கண்ணன் கொஞ்சம் கருப்பு இல்லே...?” வேண்டுமென்றே ராதாஅவளைக் கிண்டினாள். அவள் என்ன நினைக்கிறாள் என்று தெரிந்துகொள்ள..! 
அப்போது, “ஆமா... இப்ப வந்து அபிப்பிராயம் கேளு...! கருப்பா இருந்ததால தானே அவனை உனக்குப் பிடிச்சுது...! உங்க அண்ணா வெளுப்பா இருந்ததால காந்தாவுக்குப் பிடிச்ச மாதிரி...”
அந்தக் கேள்வியை ராதா கேட்டபோது, ஸ்ரீதரன் காந்தாவோடு ஊரைவிட்டு வெளியேறி விட்டிருந்தான்.
ராதாவின் முகம் மாறியது. “நீ மட்டும் என்ன..., கழுக்கு மொழுக்குன்னு பந்தயக் குதிரையாட்டம் இருக்கே. உனக்கும் ஒருத்தன் கெடைப்பான்...” ராதா பேச்சை மாற்றினாள்.
“ரொம்ப லேட்டா சொல்றியே...”
லீனா ராதாவின் தோள்மீது முகம் புதைத்துக் கொண்டாள். அவளது பரத்த உதடுகளில், வெடித்த விம்மல் ராதாவின் தோள் சதையைச் சிலிர்க்க வைத்தது, ராதாவின் கை அவள் முதுகை அழுத்திப் பிடித்துக்கொண்டது. அப்போதுதான் லீனா ஏன் கண்ணனுக்கும் தனக்குமான நெருக்கத்தை அவ்வளவு கரிசனமாக வளர்த்து வந்தாள் என்று புரிந்தது.
“எல்லாமே விசித்திர விசித்திரமாத்தான் நடந்துட்டிருக்கு...” ராதா அவள் முதுகின் மீதிருந்த கையை எடுத்து ஆள்காட்டி விரலால் லீனாவின் முகத்தை நிமிர்த்தினாள். லீனாவின் கண்கள் நிராசையால் குளம் கட்டியிருந்தன. அவள்கன்னத்தோடு தன் கன்னத்தை இழைத்த ராதாவால், லீனாவின் கழுத்தைச் சுற்றிய கையை எடுக்க முடியவில்லை.
இழந்து போனபின் மறைத்து ஸ்ரீதரன்மீது அவளுக்கு இருந்த மயக்கத்தை மறந்துவிடாமல் தன்னிடம் பகிர்ந்துகொள்ளத் தோன்றிய அவளது நேர்மை ராதாவைத் தொட்டு அசைத்தது.
கண்ணன் ராதாவிடம் வந்து புறப்படுவதற்கு நேரம் குறித்துவிட்டுப் போனதும் அவள் நேராக லீனா வீட்டிற்குத்தான் ஓடினாள்.
வீட்டில் கன்னிமேரி படத்தின் முன் லீனா முழந்தாளிட்டு ஜபம் செய்து கொண்டிருந்தாள்.
முடிந்ததும் லீனா திரும்பிப் பார்த்துவிட்டு எழுந்து நின்றாள்.
“என்ன...”
ராதா சுருக்கமாக விஷயத்தைச் சொன்னாள்.
“நான் என்ன செய்யட்டும் லீனா?”
“நான் சொல்லணுமா...? ஏன்? உனக்கே ஒன்னும் தோணலியா...?”
“ஒரு முடிவுக்குச் சட்டுன்னு வர முடியலே”
“போ...”
“என்ன சொல்றே?”
“கேட்டே... சொன்னேன்.”
“அப்பாவுக்கும் பெரியப்பாவுக்கும் ஸ்ரீதரன் பண்ணிட்டுப் போனது இன்னும் ஆறல்லே...”
ஈட்டி சொருகுவதுபோல் லீனா ஒரு பார்வை பார்த்தாள். ஒரு நிமிடம் மௌனமாக இருந்தாள். பிறகு “போகாதே...!” என்றாள். 
“என்ன...”
“பின்னே, ரெண்டே ரெண்டுதான் சாய்ஸ்...! போறது, போகாம இருக்றது...! முடிவு பண்ணவேண்டியது நீ...! ரெண்டுத்துக்கும் பின்விளைவு இருக்கு. ரெண்டுமே லைப் பூரா பாதிக்கறதுதான்...! நான் சொல்லி எதுவும் நடக்கப் போறதில்லே...”
பத்து நிமிடம்... ராதா லீனா வீட்டில் கண்ணீர் சிந்திவிட்டுத்தான் வெளியேறினாள்.
அப்போது வெளியேறியவள்அதற்குப்பின் தன் கல்யாணப் பத்திரிக்கையை எடுத்துக் கொண்டுதான் வந்தாள். லீனா பத்திரிக்கையை வாங்கிக் கொண்டதும், அவள் கையைப் பிடித்தாள்...! அவர்கள் பார்வையில் என்னென்னமோ அர்த்தங்கள் பரிமாறப்பட்டன.
அடன் பிறகு வெகுநாள்கள் கழித்து ராதா அந்தப் பயணத்தில் தான் லீனாவைப் பார்க்க வந்தாள்.
லீனா சட்டேன்று ஊகித்துக் கொண்டாள். கண்ணன் பற்றிய தகவல் கேட்கத்தான் அவள் வந்திருக்கிறாள் என்று...!
“ராதா, கண்ணன் நக்ஸலைட் ஆயிட்டானாம். ரெண்டு தரம் போலிஸ் அவனைத் தேடிட்டு வந்ததாம்.”
ராதாவுக்கு அது குற்றச்சாட்டாகப் பட்டது. கண்ணனுக்கு அவள்தான் வேர். அவனது கொந்தளிப்பை, குமுறல்களைக் கட்டுப்படுத்தி அவனைப் பூமியோடு பதிய வைத்த வேர், அது அறுந்து போயிற்று. சமூகத்தின்மீது பிறந்தது முதல் அவனுக்கு கோபம்..., நியாயமான கோபம்...! கோபத்திற்கு என்ன நியாயம் வேண்டியிருக்கிறது? அதைத் தணிப்பதற்கு ஒரேயடியாகக் குளிர் நீர் ஊற்றி அணைப்பதற்கு அவள் கிட்டவில்லை. கிட்டாமல் போன கோபம் அவனைக் கொந்தளிக்க வைத்திருக்கலாம்.
மனதுக்குள் ராதா கண்ணனிடம் பேசினாள்.
“கண்ணா... நீ இந்தப் பாதையை ஏன் தேர்ந்தெடுத்தாய்? என்னாலா...? இப்படி நினைப்பது ஒருவேளை என் கர்வம் ஆக இருக்கலாம். ஆனால் நான் உன்னோடு அன்று புறப்பட்டு வந்திருந்தால்... நீ நக்ஸலைட் ஆகியிருக்க மாட்டாய். உன்னை நான் ஆக விட்டிருக்க மாட்டேன். அப்போது என்னவாயிருப்பாய்? உன்னை நான் பி.எல். படிக்க வைத்திருப்பேன்... அப்புறம் நீ இந்த ராதாவுக்காக, என்னைச் சுகமாக வைத்திருப்பதற்காக என்னென்ன பாடுபட்டிருப்பாய். என்ன சுயநலம். உனக்குள்ளே கொந்தளித்துக் கொண்டிருக்கும் சமூக அநீதியின் அக்னியைக் குளிர்வித்து உன்னை நீயே பனிக்கட்டியாக்கி, உன்னை நம்பி ஓடி வந்தவள் என்ற காரணச் சங்கிலியாலே என் கட்டிலிலே உன்னைப் பிணைத்து வாலாட்டிண்டு நிக்கறவனாக்கி இருப்பேனோ...! சே... சகிக்லை கண்ணா, உன் வழியிலே நீ தீப்பந்தம் ஏந்தி நடக்கும்போது நான் தடையாக இருந்திருப்பேன்.”
சூசூசரி கண்ணா... எல்லாம் மிகவும் சரி...நடந்ததெல்லாம் விதிப்படியே நடந்திருக்கிறது. காதலிப்பதற்கு இங்கே தினந்தோறும் பலர் பிறந்து கொண்டிருக்கிறார்கள். பிரியமானவளின் விருப்பங்களைப் பூர்த்திசெய்ய பண வேட்டையாடி வனவிலங்குகளாய் அலைந்து குடும்பம் நிலைநாட்ட இங்கே பலர் பிறந்து கொண்டிருக்கிறார்கள். அநீதிகளைக் கண்டு குமுறி எழுகின்ற அக்னி மட்டும் இங்கே அபூர்வம் கண்ணா. எந்தப் பாதை தவறு, எந்தப் பாதை சரி என்று தீர்மானிக்க எனக்கு என்ன உரிமை? என்ன தகுதி? போ... எங்கே போனாலும் நீ வழி தவறமாட்டாய் வழி தவறினால் அதை வந்துவிட்ட தோஷத்திற்காக ஏற்றுக் கொள்ளவும் மாட்டாய்... திரும்பி விடுவாய். செய்த பிழையைத் தைரியத்தோடு ஒப்புக் கொள்வாய்...”
“ஆனால் கண்ணா... நீ என்னாலா நக்ஸலைட் ஆனாய்...?”
…..
உற்சவ கோலாகலம் முடிந்து உலாப்போன களைப்பில் பள்ளிகொண்டபெருமாள் அனந்த சயனத்திலிருந்தார். விச்ராந்தி. மறுநாள் ராதா ஊருக்குப் புறப்படுகிறாள் என்பதற்காக பட்சணங்கள், ஊறுகாய், வடாம், வற்றல் என்று வீடு தடபுடல் பட்டுக் கொண்டிருந்தது. அப்பா..., தம்பி தங்கைகளை அழைத்துக்கொண்டு எங்கோ போயிருந்தார்.
பெரியம்மாவும், அம்மாவும் தான் அடுக்ளைக்கும் முற்றத்திற்குமாக ஓடியாடிக் கொண்டிருந்தனர். காப்டன் அப்பாவின் அறையில் தூங்கிக் கொட்டிருந்தார். மின் விசிறி இரைந்து கொண்டிருந்தது.
சூசூகொஞ்சம் வடுமாங்காய் வக்யறேன். உப்பிலே ஊறப் போட்டது. தாளிதம் பண்ணக் கூடப் போறதில்லே. நீங்க ரெண்டு போரும்தான் அங்கே குழந்தைகுட்டிகளை விட்டுட்டு வந்தவாளாட்டம் றெக்கை கட்டிண்டு பறக்கிறேளே...!”
அம்மா பிளாஸ்டிக் டப்பாவில் கல் சட்டியில் ஊறிக்கொண்டிருந்த வடுமாங்காயை உப்பு நீர் இறுத்து, ஸ்பூனில் ஒவ்வொன்றாய் அள்ளிப்போட்டுக் கொண்டிருந்தாள். அவளுக்கு இரண்டு மூன்று நாளாய் தொண்டைக்குள் சிக்கியிருந்த கேள்வி ஒன்று வெளிவர சந்தர்ப்பம் தேடியது. அம்மாவின் கரிசனத்தை ரசித்துக்கொண்டு ராதா வாசற்படி மீது உட்கார்ந்திருந்தாள்.
"மாசாமாசம் இன்னும் குளிச்சுண்டுதான் இருக்கயாடி...?”
அம்மாவின் ஏக்கத்தைப் பார்க்க ராதாவுக்கு வேடிக்கையாக இருந்தது.
தாய் மகளிடம் வாய்விட்டுக் கேட்க முடியாத கேள்வி. காப்டனுக்கு வயசு ரொம்ப அதிகமாய் விட்டதோ? மின் விசிறியின் உறுமலையும் மீறி காப்டனின் குறட்டை கேட்டது. சூஅம்மாவின் கேள்விக்கு அந்தக் குறட்டை பதில் சொல்கிறது’ 
ராதா வெட்கப்படுவாள் என்று அம்மா எதிர்பார்த்தாள். அவளோ சிரித்தாள். அடுக்களையில் பட்சணம் தயாரித்துகொண்டிருந்த பெரியம்மாவுக்கு ஓசை கேட்காத மாதிரி சிரித்தாள். ரிஷிபத்தினி மாதிரி எதையோ கடந்து விட்ட சிரிப்பு.
“என்னடீ சிரிக்கறே...?”
“வேற என்ன பண்ணச் சொல்றே?”
சிரிப்பினூடே விரக்தி ஒளிந்திருக்கிறது. அம்மா சூட்சுமமாகக் கண்டுபிடித்து விட்டாள்.
வடுமாங்காய் அள்ளிப்போடும் கை சோர்ந்துவிட்டது. அம்மாவின் நெஞ்சு குமுறுவது குங்குமம் துடிப்பதில் தென்பட்டது.
“என்னம்மா கேள்வி இது...?” மறுபடியும் நெற்றியைக் கையால் லேசாக அடித்துக் கொண்டே சிரித்தாள். அம்மாவின் சந்தேகங்களை அகற்றுவதுபோல அவள் சிரித்தாள்.
ஒரு வெள்ளித்தட்டில் தேன்குழலும் சீடையுமாக பெரியம்மா வெளியே வந்தாள்.
“மாப்பிள்ளைக்குக் கொண்டுபோய்க் கொடுடீ...”
“மணி ஐந்தாகப் போகிறது. குடியாத்தத்திற்குக் குழந்தைகளை எல்லாம் சினிமாவுக்கு அழைத்துப் போவதாகச் சொன்னார். இன்னும் தூங்குறாரே...!”
பட்சணத் தட்டோடு ராதா அவர் அறைக்குள் நுழைந்தாள். கயிற்றுக் கட்டிலில் ரோமம் நரைத்த மார்போடு பீமாகாரமாக காப்டன் ஹயக்ரீவன் மல்லாந்து தூங்கிக் கொண்டிருந்தார். பெரிய ஆகிருதி. கையும் காலும் மார்பும் முகமும் எல்லாம் பெரிசு... பெரிசு... பெரிசு. ராதா அவர் வயிற்றில் ஓங்கிக் குத்தி அவரை எழுப்பினாள்.
‘ஹோவ்..’ என்று கத்திக்கொண்டே எழுந்தார் காப்டன்.
“இப்ப எப்படி இருக்கு தெரியுமா? ப்யூட்டி அண்ட த பீஸ்ட்போல இருக்கு.” அவர் சிரித்தார்.
“காப்டன், ஔறி வழிய ஆரம்பிச்சா விஸ்கி இல்லாமயே ஔறி வழியறேள்” அவர் முகம் சிறுத்துவிட்டது.
“என்னம்மாஇன்ஸல்டிங்கா சொல்லிட்டே?”
“யூ இன்ஸல்டட் யுவர் செல்ஃப்”
“ஸாரி”
அவர் முகம் தவறிழைத்ததுபோல தொங்கிப் போயிற்று. அவளுக்கு ஷில்லாங் ஞாபகம் வந்தது.
ஷில்லாங்கிலே குளிர் கொடுமை. பெட்ரூமில் ஹீட்டர் இரவெல்லாம் தேவைப்படும். ரஜாய்..., அதற்குமேல் ஒரு கம்பளி. பக்கத்திலே பெரிய ஆகிருதியோடு காப்டன் பியூட்டி அண்ட் த பீஸ்ட் சிக்கனும் பெரடும் பிரமோஷனும் ஆபிஸர் மெஸ்ஸும், பார்ட்டிகளும் எவ்வளவு சீக்கிரமாக, யாந்திரீகமாக இவர் தூங்கி விடுகிறார்...?
“பேபி ஆம் ஐ ப்ரூடல்?”
பதிலில்லை. பதில் சொல்வதற்காக ராதா விழித்துக் கொண்டிருப்பாள். செவ்வரியோடிய கண்போல், ராதாவின் மனசில் விழித்திருக்கும் கனல்போல் ஹீட்டர் விழித்திருக்கும். ஹரி குறட்டை விடுவார்.
ராதா விழித்திருப்பாள். ஹயக்ரீவனின் குறட்டையைக் கேட்டவாறே விழித்திருப்பாள்.
“ ஏன்னா ... எழுந்திருங்கோ. மணி அஞ்சாகப் போறது...”
ஷில்லாங்கிலிருந்த காப்டன் மனைவி அய்யங்கார் வீட்டு ஆசாரத்தோடு பள்ளிகொண்டாவிற்குத்திரும்பி அவரை எழுந்து உட்காரச் சொன்னாள் [தொடரும்]

No comments:

Post a Comment