தீக்குளிக்காத
விட்டில்கள் :12
"காலம்
ஒரு பெரிய மருத்துவன். அது
எல்லாப் புண்களையும் ஆற்றுகிறது. அறுத்து எறிய வேண்டியவைகளை
அறுத்து எறிகிறது” என்றாள் ரத்னா.
ராதாவும்
ரத்னாவும் ஸ்பீச் அண்ட் ஹியரிங்
இன்ஸ்டிடியூட் வழியாக மெதுவாக நடந்துசென்று
மெயின் கேட் வழியாக நுழைந்து,
மாடல் ஸ்கூலின் எதிரில் உள்ள சிறிய
பார்க்குக்குள் நுழைந்தார்கள்.
"ஒப்புக்கறேன்.
ஆனால் எல்லாமே முழுக்க மாறிப்
போறதில்லே. வடு நின்னு போயிடுது.
ஒவ்வொரு வடுவும் நமக்கு நாம்
பட்டபாட்டை நினைவுறுத்துகிறது” என்று ஆங்கிலத்தில் சொன்னாள்
ராதா. அவர்கள் இருவரும் அங்கிருந்த
ஒரு சிமெண்டுப் பெஞ்சின்மீது போய் உட்கார்ந்தார்கள். நடந்து
களைத்து விட்டவள்போல ராதா பெருமூச்செறிந்தாள்.
"ஒரு
சமயம் நினைச்சா... எதுக்கு வாழறோம்? நம்மாலே
யாருக்கு என்ன பிரயோசனம்? யார்
நாம் வாழணும்னு பிரியப்படுறாங்க? அப்படின்னு தோணுது.அப்புறமா நினைக்கும்போது,
இவங்களுக்காக, அவங்களுக்காகன்னு மனசு கற்பனை பண்ணிக்கறது”
என்றாள் ராதா.
"அந்தக்
கற்பனையைத்தான் எல்லோரும் நம்பறோம். நான் உள்பட...! எனக்கு
யாருமேயில்லை. ஆனால் யாரோ வருவாங்க.
அவங்களுக்காக நாம் வாழணும் அப்படின்னு
நான் நினைச்சுக்குவேன். உனக்கு என்ன ராதா.
காப்டன் உனக்காக உருகுறார். உன்மீது
கொள்ளையான பாசம் வச்சிருக்கிறார்!.”
வற்றி
உலர்ந்துபோய் ஒரு மூலையில் கிடந்த
ஒரு தவளையின் உடலைப் பார்த்துவிட்டு, ராதா
அதற்குப் பதில் சொன்னாள்.
"இதுதான்
ஒரு டிராஜெடி. நம்மேலே வேறே யாருக்கோ
இவ்வளவு பிரியம் இருக்குன்னு தெரியும்போது,
அது நமக்கு எல்லா சமயங்களிலும்
ரசிக்கிறதில்லே..., சில சமயத்திலே அது
ஒரு சங்கிலி மாதிரித் தோணுது.
சங்கிலிகளுக்குக் கட்டுப்பட்டு அதுக்குப் பிரியமா இருக்கணும்னு வாழ்வது
பெரிய தண்டனையாய்த் தோணுது.”
ரத்னாவுக்கு
ஏதோ பிடிபட்டது. ஆனால் அதைத் தூண்டித் துருவித் தெரிந்துகொள்ள அவள் விரும்பவில்லை.
ராதா
தொடர்ந்தாள்.
"அப்புறமா
சமூகத்திலே எப்படி எப்படி வாழணும்...
இந்த இந்த மதிப்பீடுகளை அனுசரிக்கணும்னு
நாம் நாலுபேரைப் பார்த்துக் கற்பனை பண்ணிக்கறோம். ஒரு
பழகிப்போன தடத்தில் யந்திரம் மாதிரி ஒரே இயக்கத்திலே
சுத்திக்கிட்டே போகணும்னு நம்மை நாமே நிப்ப்பந்திச்சுக்கிறோம்.
இதுக்கு யாரைக் குற்றம் சொல்றது...?
அதுக்கும் ஒருவழி கண்டுபிடிக்கிறோம். இதுதான்
விதின்னு தீர்மானம் பண்ணிக்கிறோம். நீ சொன்னியே காலம்
எல்லாத்தையும் மாத்திடும்னு, அது மாத்தறதில்லே..., அடிப்படையிலே
எதையும் மாத்தறதில்லே. பிறர் மனசு நொந்துடக்
கூடாது என்பதற்காக என்னை, என் சுகங்களைப்
பொருட்படுத்தாம இருக்கப் பழகிட்டேன். அந்தப் பிறர்தான் மாறிக்
கிட்டு வர்றாங்க ; காலம் மாறல்லே..., நானும்
மாறல்லே...”
ரத்னா
குறுக்கிட்டாள்.
"ஒருவேளை
நீயே மாற்றங்களுக்குப் பயப்படறியோ என்னமோ? உன்னுடைய அடிமனசிலேயே
ஒரு பாதையும் ஒரு பாதுகாப்பும் உனக்குத்
தென்பட்டுப் போய் அதைவிட்டுப் போறதுக்கு
நீயே பயப்படறதாகவும் இருக்கலாம்.”
தலையை
அசைத்தவாறு ராதா அதை ஆமோதித்தாள்.
"கரெக்ட்
ஆனால் மனசிருக்கு. மனசுக்கு அமைதி கிடைக்கலே ...”
ரத்னா
புன்முறுவல் பூத்தாள்.
"மனசுன்னு
இருந்தால் அது இருக்கிற வரைக்கும்
அமைதியிருக்காது.”
பெருமூச்சு
விட்டிருந்த ராதா சிரித்தாள். இந்த
ஆழ்ந்த சம்பாஷனைக்குப் பிறகு அவளுடைய சிரிப்பு
ஜீவனற்றுத் தென்பட்டது. .
"ரத்னா...,
நீ ஒரு பெரிய வேதாந்தி.
நீ சொன்ன இதே வார்த்தைகளை
எங்க தமிழிலே பெரிய பெரிய
மகான்கள் சொல்லியிருக்காங்க. மனம் மரிக்காத வரையில்
விமோசனம் இல்லை."
அந்தச்
சூழ்நிலையை லகுவாக்க வேண்டுமென்று ரத்னாவுக்குத் தோன்றிற்று.
"நேத்து
மழை பெய்தப்புறம் லைட் ஆப் ஆயிடுச்சே.
அப்போ நீ என்ன பண்ணிக்கிட்டிருந்தே”
என்று கேட்டாள் ரத்னா.
"நேத்து
சாயந்திரம் ஏழு மணிக்குத் தானே?”
என்று கேட்டுவிட்டு யோசிப்பதுபோல் சற்றுநேரம் அமைதியாயிருந்தாள் ராதா.
"டாக்டர்
ராமாராவ் வீட்டிலே பீட்ரூட் அல்வா பண்ணியிருந்தாங்க. அப்பத்தான்
இரு தட்டிலே அதைக் கொண்டுவந்து
டேபிளாண்டை வச்சாங்க. உடனே லைட் ஆப்
ஆயிடுச்சி. அப்புறமா மெழுகுவர்த்தியைக் கொளுத்தி வச்சிட்டு அல்வா சாப்பிட்டேன்” என்றாள்
ராதா.
"நேத்து
நானும் ரூம்லே மெழுகுவர்த்தி கொளுத்தி
வச்சேன். ஏகப்பட்ட ஈசல். ரெண்டு மூணு
ஈசல் மெழுகுவர்த்திலே வந்து விழுந்து கருகிப்போச்சு.
மெழுவர்த்தியே அணைஞ்சு போச்சு. பாவம்
அந்த ஈசல்கள்’ என்று ஈசல்மீது பரிதாபப்பட்டாள்
ரத்னா.
"ஈசல்
ஒன்றும் பாவமில்லை. அதைப் பார்த்துட்டு பரிதாப்படறமே
நாமதான் அய்யோ பாவம்” என்று
தொடர்ந்தாள் ராதா.
"ஈசல்கள்
தீயின் சுடரிலே ஏதோ ஒரு
சௌந்தர்யத்தைத் தரிசிக்கின்றன. அது சுடும்..., நம்மை
எரிச்சிடும். அப்படியெல்லாம் மனுஷர் மாதிரி உக்காந்து
யோசிச்சுட்டுத் திரும்பிப் போயிடுற புத்தியை நல்ல
காலமா பகவான் அதற்குக் கொடுக்கலே . அவைகள்
தீயை நேசிக்கின்றன. அதன் சுடரில் பாய்ஞ்சி
தங்களையே சமர்ப்பணம் செய்துகொள்கின்றன.”
ரத்னாவுக்கு
ராதாவின் மனப்போக்குப் புரிந்தது.
மீண்டும்
அந்தச் சூழ்நிலை கனத்துவிடுமோ என்று அஞ்சி அதைத்
தவிர்ப்பதற்கு அவள் முனைந்தாள்.[தொடரும்]
No comments:
Post a Comment