Monday, 17 July 2017

தீக்குளிக்காத விட்டில்கள் :9

தீக்குளிக்காத விட்டில்கள் :9
மைசூரிலிருந்து வடமேற்கே மானசகங்கோத்ரி. ரீஜனல் காலேஜ் ஆஃப் எஜுகேஷன்.  தலை திரும்பிக்கும் பார்க்கும் தூரத்தில் சாமுண்டி மலையில் சாயந்திரத்திலே விளக்குகள் பிரகாசிக்கின்றன. குல்மொஹர் அவென்யூவில் ரத்தச் சிவப்பில் குல்மொஹர் பூத்திருக்கிறது. மாலை மங்கி இரவு வந்ததும் ஆடாமல் அசையாமல் கப்பல்கள் நிற்பதுபோல் கங்கா ஹாஸ்டலிலும், கிருஷ்ணாவிலும் நர்மதாவிலும் ஜன்னல்களின் விளக்குகள் எரிகின்றன. காம்பஸைச் சுற்றிய சரக் கொன்றை மரங்களின் கோலாகலமான பூச்சொரிவின் மத்தியில் கன்னடமும், மலையாளமும், தமிழும், தெலுங்கும் நடமாடுகின்றன. மெர்க்காராவைக் கடந்த காற்று காவிரியின் களிப்பிலே உரசிக் கொண்டு வந்து காம்பஸிக்குள் தவழ்கிறது. புத்துணர்ச்சி ஊட்டுகிறது..., புனர் ஜன்மம் அளிக்கிறது.
மறுபடியும் கல்லூரி வாழ்க்கை.
எத்தனை பெரிய வரப்பிரசாதம்...! படித்துக் கொண்டே இரு...! ராதா படித்துக்கொண்டே இரு...!
கானலும் அர்த்தச் சூன்யமும், தீராத பசி தாகங்களின் தகிப்பும் கல்லூரியின் நியம ஒழுங்கிலே பின் வாங்குகின்றன; மெல்ல சக்தி இழக்கின்றன. மகான்கள் மனசிலே பிரவேசிக்கிறார்கள். தோர்ண்டைக்கும், பாவ்லோவும், ரூஸோவும், ஜான்டூபியும், வாட்ஸ்னும், ஸ்கின்னரும் மெதுவாகப் பரிச்சயமாகும்போது, மிஸஸ் மல்ஹோத்ராவும் ஷியாம் சிங்கும் மரிக்கிறார்கள். ஆயினும், ஒரு குழந்தை மட்டும் கனவிலே அவள் மார்பில் முட்ட வருகிறது. தன் பிஞ்சு உதடுகளால் மார்பின் காம்பைக் கவ்விச்  சுவைக்க வருகிறது. அந்த முனைகள் ஏங்கித் தவிக்கின்றன. கற்பனையாக ஒரு ஈரம்...! ஒரு தாபம்...!
ஒரு வார காலம் மைசூரில் ரீடர் ராமராவின் விருந்தினராகத் தங்கியிருந்து... அவரோடும் அவர் மனைவியோடும் ராதாவைக் கவனித்துக் கொள்ளச்சொல்லிவிட்டுப் ... நர்மதா ஹாஸ்டலில் அவளைச் சேர்த்தபின் காப்டன் ஷில்லாங்குக்குப் புறப்பட்டார்.
"பேபி நான் புறப்படட்டுமா?”
"நானும் ஸ்டேஷனுக்கு வர்றேன்.”
"நோ... அப்புறமா நீ தனியாத் திரும்பிவர வேண்டியிருக்கும். சாயந்தரமாகப் போறது.”
"காப்டன் நீங்க தனியா ஷில்லாங்கிலே இருக்கப் போறேளே..”
அவர்கள் இருவரும் ஆட்டோவிலிருந்து இறங்கி ரிசர்வேஷன் கவுண்டரில் டிக்கெட்டை வாங்கிக்கொண்டு போர்ட்டரோடு ஸ்டேஷனிலே பிரவேசிக்கும்போது ராதா சட்டேன்று நின்றுவிட்டாள்.
அவள் முகம் வெளிறிற்று.
கையில் ஒரு பெரிய கறுப்பு சூட்கேஸோடு கண்ணன் வந்துகொண்டிருந்தான். ஆள் மிகவும் மாறியிருந்தான். கண்ணாடி அணிந்திருந்தான். நடையிலே பழைய வேகமும், துடிப்பும் குறைந்திருந்தன. நிதானமாகவும், தீர்மானமாகவும் நடந்து வந்தான். சற்று கறுத்திருந்தான். உடம்பு மெலிந்திருந்தது.
ராதாவின் முகத்தைப் பார்த்ததும் அவனும் சட்டென்று நின்றான். ஒரு கணம் அவளை அமைதியாகப் பார்த்துவிட்டு புன்னகை செய்தான்.
"கண்ணன்...?” என்று ஊர்ஜிதப்படுத்திக் கொள்வதுபோல் கேட்டாள் ராதா.
"எஸ்” தலையை ஆட்டி விட்டுப் புன்னகை செய்தான்.
"இங்கே எப்படி?”
"படிக்க வந்திருக்கேன். ரீஜனல் காலேஜ். பி.எட்.”
பள்ளிகொண்டாவின் ஆற்றங்கரையில் இருளும் மௌனமும் நாகங்கள்போல் ஒன்றோடொன்று சுற்றிப் பிணைந்திருந்த ஒரு மாலையில் கேட்ட இடியின் கர்ஜனை இப்போது அவளுக்குள் எதிரொலித்தது.
"திஸ் ஈஸ் மிஸ்டர் கண்ணன். சொல்லியிருக்கேன் இல்லே. என் பாய்பிரண்ட்...! இவர் என்னுடைய ஹஸ்பெண்ட் ஹயக்ரீவன்.”
"ஹலோ” காப்டனின் பருமனான சதைப்பிடிப்பான கரம், கண்ணனின் கறுத்த, மெலிந்த கையை இங்கிதத்தோடு பற்றிக் குலுக்கியது. அந்தக் கரங்கள் இணைவதை வினோதமாகப் பார்த்துவிட்டு மனசுக்குள் சிரித்துக்கொண்டாள் ராதா.
"ஹி ஈஸ் லீவிங் டு ஷில்லாங்.”
அவரை வழியனுப்ப வந்ததை சூசகமாகத் தெரிவித்தாள் ராதா.
"இன்னும் டயம் இருக்கே.. ஹவ் எபௌட் எ டீ?” என்று கேட்டார் காப்டன் ஹயக்ரீவன்.
ராதா காப்டனை உற்றுக் கவனித்தாள். அவரது பரந்த பெரிய முகத்தில் ஓடும் ஒவ்வோரு சிறு உணர்ச்சியையும் கிரகித்துக் கொள்வதுபோல் அவரைக் கவனித்தாள்.
"ஐ ம் வெரி ஹாப்பி... மிஸ்டர் கண்ணன்...! ராதாவை எங்கேயோ விட்டுட்டுப் போற மாதிரி எனக்கு ஒரு பயம் இருந்தது. நீங்கள்ளாம் இருக்கிறதிலே கவனிச்சுப்பீங்கற தெம்பு இருக்கு...”
"ஷ்யூர்லி...” கண்ணன் விகல்பமின்றி அழகாக, கண்ணியமாக ஒரு புன்முறுவல் செய்தான்.
அவன் டீ குடிப்பதை, மெதுவாக எழுந்து நடப்பதை, பில் கொடுப்பதற்கு மிகவும் நாகரிகமாக முயற்சிப்பதை, சிரிப்பதை காப்டன் கவனித்துக்கொண்டே இருந்தார். அவர் கவனிப்பதை ராதாவும் கவனித்தாள்.
ரயிலுக்கு நேரமானதும் அவர்கள் இருவரும் ஜன்னலுக்கு வெளியே நின்றனர்.
"ஸோ... பி கேர்ஃபுல் ராதா... போன் பண்ணிண்டு இரு... என்ன வேணுமானாலும் எழுது"
ரயில் புறப்படும்போது ராதா, காப்டனின் முகத்தில் தெரிந்த ஒரு புதிய மாற்றத்தை கவனித்தாள். அவர் முகம் வீங்கியபோல் சிவந்து குழம்பியிருந்தது. அவள் தனக்கு எவ்வளவு அத்தியாவசியன் என்பதை முகத்தின் ஒவ்வொரு நரம்பும் புலப்டுத்துவது போன்று, அந்தப் பிரிவின் முழுப் பளுவும் அழுத்துவதை வெளியிடுவது போன்று, கண்ணீரின் உதயத்தை   கட்டுப்படுத்துவது போன்று அவர் சிரித்தார். மெல்ல கையை ஆட்டினார்.
ஆட்டோவிலே ராதாவும் கண்ணனும் அருகருகே அமர்ந்திருந்தனர். வளைவுகளிலும், இறக்கங்களிலும் தோள்கள் இடித்தன; தொடைகள் உரசிக் கொண்டன; உடல்கள் இணைந்து விலகின. கண்ணன்தான் விலகி விலகி உட்கார்ந்தான். கொஞ்சதூரம் வரை ஆட்டோவில் கனமான மௌனம் நிலவியது.
'கண்ணா உனக்கு என்ன ஆயிற்று? இரவுகளிலும் பகல்களிலும் உன் பெயரை ஜபித்துக் கொண்டிருந்த ராதா இதோ உன் பக்கத்தில், நீ தொட்டு அணைக்கின்ற நெருக்கத்தில் உட்கார்ந்திருக்கிறேன். நீ ஏன் மௌனமாக இருக்கின்றாய்...?'
ஆட்டோ சற்றே இருண்ட சாலைகளின் வழியே போய்க்கொண்டிருந்தது. ராதாவின் கை ஒரு சாலை திருப்பத்தில் அவன்மீது பட்டது. அவன் மீண்டும் விலகி உட்கார்ந்தான்.
"எனக்கு நீ வேண்டும்” என்று ஆற்றங்கரையில் ஒரு பிரியப் புறாவைப் பற்றுவதுபோல் ஆதுரமாக அவன் அதே கையை ஏந்தியது ஒரு மின்னலாய் அவளுள் தெறித்து மறைந்தது. அதே வாக்கியத்தை இப்போது அவன் காலடியில் வீழ்ந்து சொல்ல வேண்டும்போல் அவள் மனம் துடித்தது.
ஆனால் இவன் அவனல்ல. யாரோ... இவன் அந்நியன்...! அந்தக் கண்ணன் அல்ல...
காம்பஸைச் சுற்றிய சரக் கொன்றை மரங்களின் கோலாகலமான பூச்சொரிவின் மத்தியில்கல்லூரிக்குப் புதிதாய் வருபவன் ஒரு பழைய மாணவனை வழி விசாரிப்பதுபோல் அவன் கேட்டான்.
"நீ எங்கே போகணும்?”
"எனக்கு ஹாஸ்டல்லே இடம் தேவைன்னு விண்ணப்பத்திலே குறிச்சிருந்தேன்.”
"கங்கா ஹாஸ்டல்லே தான் நீ தங்கணும் . வா நான் சொல்றேன்.”
ஆட்டோ கங்கா ஹாஸ்டலின் போர்டிக்கோவினுள்நுழையும் வரை அவர்கள் இருவரும் ஒன்றும் பேசவில்லை.
                                                                        ....  ....
மூன்று வேளைகளிலும் ஹாஸ்டல் மணிகள் அடிக்கின்றன. கங்காவிலே அடித்து முடிந்ததும் நர்மதாவிலே, அடுத்து கிருஷ்ணாவிலே...! ரோந்து சுற்றும் வாட்ச்மேன் இரவுகளில் பறவைகள் எல்லாம் கூட்டில் அடங்கிய நிசப்தத்தில் விசில் ஊதுகிறான். பெல்டோபோரம் அவென்யூவிலும் குல்மொஹர் அவென்யூவிலும் சாலைகள் மெல்லிய பனித்துளிகளோடு மிதக்கின்றன. வண்ண வண்ணமான சிறகுகள் அணிந்த பட்டாம்பூச்சிகள்போல் ஆணும் பெண்ணுமாய் இளமை தன் பொற்காலத்தைக் கொண்டாடுகிறது, களிக்கிறது. காதல்கள் சாலையோரத்துச் சந்திப்புகளில், மர நிழல்களில், காண்டீனில் குறுநகைகளாக மலர்கின்றன. ஒருவர்பால் ஒருவர் காட்டும் பரிவாய், தன்னை வெளிப்படுத்திக் கொள்ளும் துடிப்பாய்ச் சொரிகின்றன. கனவுகளின் சிறகுகள் படபடக்கின்றன.
ராதாவும் கண்ணனும் ஒரே க்ரூப். ஒன்றாக வகுப்பிற்குப் போனார்கள்.
ஒருவரையொருவர் ஏறிட்டுப் பார்த்துக் கொண்டார்கள். பிரிந்து போனார்கள். இதற்குமுன் ஒருவரையொருவர் சந்தித்தே இராதவர்கள்போல், இன்னும் சில மாதங்களுக்கு அப்புறம் எந்தத் தொடர்புமின்றி கடந்து போகப் போகிறவர்கள்போல் கடந்து சென்றார்கள். ஒரு கனமான சுவர், மதில் உயர்ந்த கருங்கற் சுவர் இருவர் மத்தியிலும் எழுந்து நின்றது.
அந்த சுவர் எத்தனை பொய் என்பதை இருவரும் உணர்ந்தார்கள். இருவரும் அது தவிர்க்க முடியாதது என்றும் புரிந்து கொண்டார்கள்.
கண்ணனுக்கு என்ன நடந்தது? நக்ஸலாகயிருந்தவன், எரிமலையாய் வெடித்து பிரளயமாய்க் கொந்தளித்து எல்லாவற்றையும் மாற்றியமைக்க விரும்பியவன் ஏன் இங்கே ஆசிரியர் பயிற்சிக்குப் படிக்கிறான்? ராதாவிற்குள் கேள்விகள், எத்தனையோ கேள்விகள்.
பெல்டோபோரம் அவென்யூ வழியாக ஏதோ வேலையாக அவன் வருவதை அவள் தலைதூக்கிப் பார்ப்பாள். அவள் பார்ப்பதைக் கவனித்துவிட்டு அவன் தலைகுனிந்து கொண்டு கடந்து சென்றுவிடுவான்.
ஷில்லாங்கின் மலை குளிரிலே, ஹீட்டரும் தானுமாய் விழித்திருந்த இரவுகளிலே, தேகங்களின் மூர்த்தண்யமான ஸ்பரிச வேட்கைகளிலே எதிர்நோக்கப்பட்ட அந்த கண்ணன், வெறும் நிழல்போல அவள் கண்ணெதிரே அடிக்கடி கடந்து போனான்.
கணேஷ் சதுர்த்தி வந்தது. தசராவுக்கு கல்லூரி சில நாட்கள்  லீவ் விட்டார்கள். தீபாவளி வந்தது. டிசம்பரின் நாள்கள் ஒவ்வொன்றாய் உதிர்ந்து வந்தன. மார்கழியின் குளிர் மெதுவாய் விரிந்தது. கல்லூரியிலே கலை நிகழ்ச்சிகள் நடந்தன. வழக்கமாயின..., எல்லாம் பழகிப் பழகி சாதாரணமாயின.
ராதா எகற்காக இங்கே வந்தாளோ அந்தக் கல்வியிலே முழுக் கவனத்தையும் செலுத்தினாள். அவளது ரூம் மேட் ரத்னா, தென் கர்நாடகத்திலிருந்து வந்தவள். ஆரஞ்சு கனிந்திருப்பதுபோல் ஓரு முகம், அந்த முகத்திலே எப்போதும் ஒரு மந்தகாசம். ஏதாவது கேட்டால் அவள் மெதுவாகச் சிரிப்பாள். கன்னங்கள் குழிய அவளது சிவந்த உதடுகளில் அந்த சிரிப்பு மலர்வது, 'வாழ்க்கை வாழத் தகுந்ததுதான்’ என்று ஒரு புதிய உண்மையைச் சொல்லும்.
பரீட்சை வந்திருக்கிறதா? மணியார்டர் வரவில்லையா? தலைவலிக்கிறதா? எல்லாவற்றிற்கும் ரத்னா மெதுவாகச் சிரித்தாள்.அவளைத் தேடிக்கொள்டு அந்த இனிமையான இதய மலர்ச்சியின் மகரந்தம் போன்ற அந்த சிரிப்பில் சங்கமிக்கும் அவாவோடு நர்மதா ஹாஸ்டலின் எல்லா அறைகளிலிருந்தும் பெண்கள் வந்தார்கள்.
படித்துக் கொண்டிருக்கும்போது, எழுத்து வேலையில் மூழ்கியிருக்கும்போது இப்படிப் பலர் வந்து போவது முதலில் தொந்தரவாக இருந்தது. அந்த இடையூறுகளிலிருந்து ராதா விலகி நிற்கப் பழகிக்கொண்டாள்.
 ரத்னாவைத் தேடி வருகின்ற ஒவ்வொருவரையும் அவர்களது சுபாவங்களையும் எண்ணங்களையும் கவனித்துப் பார்க்க கற்றுக்கொண்டாள்.
ஒன்றோடொன்று வித்தியாசப்படுகின்ற, முரண்படுகின்ற குணங்கள். இங்கே துக்கங்களுக்கு அர்த்தமில்லை. மதிப்பீடுகளுக்குப் பொருளில்லை. சொந்தத் துயர்கள், அலை கடற்கரையில் இரைந்திருக்கும் வெறும் கிளிஞ்சல்கள், அனுசரிக்க வேண்டிய பொய் மரியாதைகளும், மாட்டிக்கொள்ள வேண்டிய சமூக பந்தங்களும், தரித்துக் கொள்ள வேண்டிய வெளி வேஷங்களும் வெகு தூரத்திலிருக்கின்றன. கிலோ மீட்டர்களுக்கு அப்பால்.... வருஷங்களுக்கு அப்பால்... நான்கு நான்கு சுவர்களாகப் பிரிந்து ஒவ்வொருவர் வரவையும் எதிர்நோக்கிக் காத்திருக்கும் கூண்டுகளிலே...!
அவை அங்கேயே  இருக்கட்டும். சுதந்திரம் என்னும் ஆனந்த மதுவின் சிற்சில துளிகளைப் பகிர்ந்துக் கொள்ளுங்கள். இவை அபூர்வமானவை. பிறந்த குழந்தையின் நிர்வாணம் போன்று பரிசுத்தமானவை.
ராதா அவற்றைக் கருத்தளவிலே அங்கீகரித்தாள். ரத்னாவின் சிரித்த முகத்தில் சற்று லயிக்க வந்த எல்லோரையும் நேசித்தாள். விசாலமானாள். பிறர் குறைகளை மன்னித்தாள். எல்லோரையும் ஏற்றுக் கொண்டாள்.
'கண்ணா... இதோ நீ மாற்ற விரும்பிய சமுதாயம். இவர்கள் எல்லோரும் நாளை ஆசிரியராகப் போவோர். புதிய தோட்டங்களில் பதியன் போட்டு ஒட்டுப்போட்டு புதிய  மனிதர்களைச் சிருஷ்டிக்கப் போவோர். மாறுதல்களின், புரட்சிகளின் கருக்கள். இவர்களிலே நீ என்ன சலனத்தை உருவாக்கினாய்?'
 நர்ஸரி அவென்யூவிலிருந்து வரும் கண்ணனுக்குச் சம்பிரதாயமான ஒரு ஹலோ சொல்லும்போது அவள் தனக்குள் அந்தக் கேள்வியைக் கேட்டுக் கொண்டாள்.
கல்லூரியில் வாலிபாலும், பேஸ்பாலும், பேட்மிண்டனும் ப்ராக்டிஸ் செய்தார்கள். கருத்தரங்கு வைத்தார்கள். கலை நிகழ்ச்சிகள் நடத்தினார்கள். சிலவற்றிலே ராதா கலந்துகொண்டாள். கல்லூரியின் கலாச்சார வாழ்வில் இணைந்து கொண்டாள். ஆனால் கண்ணன் எங்கும் இல்லை. எதிலும் சேரவில்லை. தன்னந்தனியாக நடந்து சென்றான். லைப்ரரி மூடும்போது கடைசி ஆளாக வெளியே வந்தான். பாடங்களில் அவன்தான் முதல் தரமாக இருந்தான். முதல் ராங்க் வாங்கும் போட்டி மும்முரமான போதிலும், அவனை யாராலும் முறியடிக்க முடியவில்லை.
ராதாவிற்கு வைராக்கியம் தோன்றியது. அவனது மௌனத்தை அவன் மாதக் கணக்காக வழங்கி வரும் தண்டனையை உதாசீனம் செய்துவிட்டு, எல்லாத் தேர்வுகளிலும் அவன் வாங்கி வரும் முதல் ராங்க்கை எட்டிப் பிடிக்கவேண்டும் என்ற உத்வேகம் தோன்றிற்று. வகுப்பிலே ராதாவின் மார்க்குகள் ஒவ்வொருவரையும் கடந்து கண்ணனைத் துரத்தத் தொடங்கின.
அது ஓர் ஓட்டப்பந்தயம், எல்லாப் பந்தயங்களையும் போல, எல்லா போட்டிகளையும் போல, அதிலும் ஒரு ரசமான விறுவிறுப்பு உண்டு. கண்ணனுக்கு ராதாவின் உத்தேசம் புரிந்ததுவிட்டது. ஓட முடியாதவர்கள் ஓடுவோரைக் கவனிப்பதுபோல அந்தப் பந்தயத்தைக் கவனிக்க ஆரம்பித்தனர். இது ஒரு விதமான கம்யூனிகேஷன் என்பதை கண்ணன் புரிந்துகொண்டான் என்பதில் ராதாவுக்கு ஒரு திருப்தி.[தொடரும்]

No comments:

Post a Comment