Wednesday, 19 July 2017

தீக்குளிக்காத விட்டில்கள் :10

தீக்குளிக்காத விட்டில்கள் :10
-----------------------------------------------
"எல்லா சினிமாக்களிலும் வருகின்ற முக்கோணக்கதை மாதிரிதான் இருக்கிறது” என்றாள் ரத்னா.
யூனிவர்சிட்டி கேண்டீனின் எதிர்ச்சாரியில், விழுதுகள் படர்ந்து வெகுகாலம் தவமிருக்கும் மகரிஷி ஒருவர் போன்ற முதுமை தட்டிய ஆலமரத்தின்கீழ், சில்லென்று உறைக்கும் சலவைக் கல் பெஞ்சின்மீது ரத்னாவும் ராதாவும் உட்காந்திருந்தனர்.
எதிரே இணை இணையாக, தனியாக, கூட்டமாக மாலைக் காற்றின் மயக்கும் சுகத்தின் லயத்தில் களித்து நடக்கின்ற இளைஞர்கள்.
"லைஃப் ஈஸ் ஆல்வேஸ் எ ட்ரையாங்கிள் ரத்னா... எவரி வேர். நீ ஒரு கோணம். ஐ மீன் பிஸிகல் யூ. உன் மனம் ஒரு கோணம். வாழ்க்கை என்ற நிஜம் ஒரு கோணம். எல்லாம் முக்கோணங்கள்.”
கையில் சுருட்டி வைத்திருந்த கன்னடப் பத்திரிகையால் ராதாவின் கன்னத்தில் செல்லமாக அடித்துவிட்டு, "ஆர் யு அஃபெண்டட் மை யங் பிலாஸபர்?” என்று சிரித்துக்கொண்டே கேட்டாள் ரத்னா.
'எப்படி என் விமர்சனத்தை வைத்துக்கொண்டு நீ மனம் புண்பட்டு விடலாம்’ என்று செல்லமான குழந்தைத் தவழுகின்ற ஒரு சொந்தம் அதில் தொனித்தது.
"எனக்குக் கோபமும் இல்லே. நான் தத்துவமும் பேசலே” என்று ஆங்கிலத்திலே ஆரம்பித்தாள் ராதா.
"இதுதான் உண்மை. முக்கோணங்களின் கட்டமைப்பு போலத்தான் வாழ்க்கை இருக்கிறது.”
"கண்ணன் கூப்பிட்டப்போ நீ போயிருந்தா...?”
"யார் கண்டது... அப்போதும் ஒரு முக்கோணம் உருவாகியிருக்கலாம். நான்..., அவன்..., சமூக அங்கீகாரம்...”
"அப்படி எடுத்துக்கோ...! நடந்தது எல்லாம் நல்லதுக்குத்தான். பிரச்சனைகள் அவனையும் உன்னையும் விட்டுக் கடந்துபோய் விட்டன. பி.எட்டை முடிச்சுட்டு நீ ஷில்லாங்குக்குப் போ. அவன் வேற எங்கயாவது போவான். காலம் எல்லாவற்றையும் மறக்கடிக்கும். எல்லாம் விதிப்படி நடக்கும் ”
கேட்பதற்கு எவ்வளவு எளிமையாக இருக்கிறது? சிக்கல்களைச் சுலபமாக அறுத்துவிட்டு, மிருதுவாகச் சிரிக்கின்ற ரத்னாவைப் பார்த்தாள்.
"அப்படியிருக்க உன்னால முடியுமா ரத்னா...?”
அவளது கேள்வியைக் காதில் வாங்கிக்கொண்டு மெதுவாகச் சிரித்த ரத்னாவைப் பார்த்தாள் ராதா.
'ரத்னா, நீ தெரிந்துகொள்ள வேண்டியது எவ்வளவோ இருக்கிறது. நான் சொன்னது நாணயத்தின் ஒரு பக்கம்தான். மீதியை நான் மட்டும் சொல்ல முடியாது. பெண்ணாகப் பிறந்தவள் எவளாலும் வாய்விட்டு வெட்கமின்றி சொல்ல முடியாது.' மனதிற்குள் சொல்லிக்கொண்டாள்
"உன் கதையை நீ சொல்லிட்டே... இப்ப என் முறை” ரத்னா சிரிப்பு மாறாமல் ஆரம்பித்தாள்.
"வாழ்க்கை... நான் பொறந்ததுமே சிரிக்கிற சந்தர்ப்பத்தை எங்கிட்ட இருந்து பிடுங்கிக்கொண்டது. நான் பொறந்ததுமே அம்மா என்னைப் பெற்ற பாரம் தாங்காம செத்துப் போயிட்டாள். எனக்காக அப்பா ரெண்டாவது கல்யாணம் பண்ணிக்கிட்டார். எல்லா சித்திகளையும் போல அவளுக்குக் குழந்தை பிறந்ததும் என் பேரிலிருந்த பாசம் குறைந்து போயிற்று. பத்து வயசிலே அப்பா ஹார்ட் அட்டாக்கிலே போய்ட்டார். மாமா எடுத்து வளர்த்தார். அவருக்குக் கொஞ்சம் காப்பித் தோட்டம்இருந்தது. சௌகரியமாய் படிக்க வைச்சார். ஹைஸ்கூல் முடிஞ்சதும் அவரும் ஆக்ஸிடண்ட்லே போய்ட்டார். அத்தை காலேஜ்லே படிக்க வச்சாள். இந்த கோர்ஸ்லே நான் சேர்ந்த முதல் வாரத்திலே அத்தையும் போயிட்டாள். எனக்கு யாருமில்லே...! மங்களூரிலே அத்தை எழுதி வச்ச ஒரு வீடு இருக்கு. மாமாவோட பழைய வேலைக்காரி ஒருத்தி அந்த வாடகையை வாங்கி அனுப்புறாள், அவ்வளவுதான். அப்புறமா மங்களூர்லே காலேஜ்லே படிக்கிறப்ப கோபால பட்னு ஓர் இளைஞன் என்னோட படிச்சான். நாங்கள் நேசித்தோம். நல்ல காலமா அவனுக்கு ஒண்ணும் ஆகலே. எனக்காக உயிரையே கொடுக்கிறதாய்ச் சொன்னான். நான் அவன் சொன்னதை வார்த்தைக்கு வார்த்தை நம்பினேன். நல்ல வரதட்சணையோட ஒரு டாக்டர் வீட்டுப் பெண் வந்ததும் ஒரு குட்பை கூடச் சொல்லிக்காமே அவன் அவளைக் கல்யாணம் பண்ணிக்கிட்டுப் போயிட்டான்.”
ரத்னா சிரித்துக்கொண்டே செய்திச் சுருக்கம் சொல்வதுபோல் சாதாரணமாகச் சொன்னாள். "இப்போ எனக்கு யாருமில்லே. அந்த வீட்டு வாடகையிலே நான் படிச்சிட்டிருக்கேன். என்ன பண்ணப் போறேன்..? யார் என்னை இனிமே ஆதரவு காட்டிக் காப்பாத்துவாங்க ஒன்றும் தெரியலே...”
ராதா அசைவற்று உட்கார்ந்திருந்தாள். சுற்றிலும் நியான் விளக்குகள் எரியத் தொடங்கின. இரண்டு இளைஞர்கள் தங்கள் சினேகிதர்களோடு கேண்டீனை நோக்கிப் போயினர். ஒருவன் ஏதோ ஜோக் அடித்திருக்க வேண்டும். 'ஓஹ்ஹோஹ்ஹோ...’ கையைத் தட்டிக்கொண்டு அந்த இரண்டு பெண்களும் விழுந்து விழுந்து சிரித்தனர். நாலைந்து பேர் திரும்பிப் பார்ப்பதைப் பற்றிக் கவலையின்றி அவர்கள் குதூகலம் அலையலையாய்ப் பொங்கிற்று.
சிரிப்பும், ஒளியும் நிறைந்த சூழ்நிலை கடந்து, ஒரு கூர்மையான ஆப்புமுனை தனக்குள் இறங்கியதை ராதா உணர்ந்தாள். ரத்னா... ஆறு மாசமா ஒரே அறையில் ஒன்றாகப் படுத்து, ஒன்றாகப் பேசி, ஒன்றாகச் சிரித்து மகிழ்ந்த ரத்னா... தன் ரத்னா... அந்த ஆப்புமுனையின்மீது ஒரு சம்மட்டியின் அடி ஓங்கி ஓங்கி விழுந்தது. ரத்னா... ரத்னா... உன்னால் எப்படி சிரித்துக் கொண்டிருக்க முடிகிறது. ரத்னாவின் கையை ஆதுரமாகப் பற்றிக் கொண்டாள்.
"என் மேலே பரிதாபப்படறியா..” ரத்னா சிரித்துக்கொண்டே கேட்டாள்.
"சீ... ஐ லைக் யூ...”
"என்ன திடீர்னு?”
"ஐ லவ் யூ”
"மை காட்... ஸ்டாப் திஸ் நான்சென்ஸ்.”
"ஈஸ் லவ் எ நான்சென்ஸ்?”
"தென் விச் எல்ஸ் உட் பி ஆஸ் நான்சென்ஸ் ஆஸ் லவ்?”
"ஏய் என்ன ஒனக்கு இவ்வளவு விரக்தி?”
"விரக்தியா.. உனக்கும் எனக்கும் நடந்ததும் அப்புறமா வருத்தப்பட்டு கிட்டிருக்கிறதும் வேற என்னவாம்?”
"இட்ஸ் பார்ட் ஆஃப் தி லைஃப்...! சென்ஸோடே வாழ்ந்து என்ன சாதிக்கப் போறோம்? லெட் இட் பி நான்சென்ஸ். ஆல் சென்சஸ் எண்ட் தேர் . ஐ அட்மைர் யூ...! யு ஆர் கிரேட்..."
"இன்னிக்கு உனக்கு ஒரு லெட்டர் வந்தாப்பிலே இருக்கு...? சிரிச்சுகிட்டே படிச்சியே? யார்கிட்டேயிருந்து...? ஷில்லாங்கா...?
"ஆமா...”
"என்ன சொல்றார் காப்டன்?”
"வழக்கப்படி.. நான் இல்லாம போரடிக்கறது..., வாழ்க்கை சூன்யமா இருக்கு..., ஸோ ஸோ ஸோ ஸோ...”
"கல்யாணம் பண்ணினப்புறம் மனைவியை எங்கேயோ தூரத்திலே படிக்க அனுப்பி வைச்சுட்டு..., மாதாமாதம் பணமும் பிரஸெண்டேஷனும் அனுப்பிச்சிட்டு..., ஒரு நாளைக்குப் பத்து தரம் செல்போன்ல பேசிக்கிட்டு வெண்ணெய்யா உருகறாரே... அதற்கு இந்த மாதிரியா ரியாக்ட் ஆகிறது...?”
ராதா மௌனமாயிருந்தாள்.
"ஏன் மௌனமா இருக்கே...?”
ராதா பதிலளிக்கவில்லை.
"ஈஸ் தெர் எனி ராங் வித் ஹிம்...”
மௌனம்..., ஓசையை ஊடுருவும் மௌனம்...!
”ஐ ஆம்... ஸாரி...” எதையோ ஊகித்துக்கொண்டவள் போலிருந்த ரத்னா தன் வருத்தத்தைப் பிரியமாய், ஆதரவூட்டுகின்ற தன் சிரிப்பிலே வெளிப்படுத்தினார்.
"புறப்படலாமா...? டைம் ஆச்சு...”
ராதா மௌனம் கலையாமல் எழுந்தாள். அவர்கள் ஊஞ்சல் போல் உந்தி உந்தி விட்டுவிட்டு வீசுகின்ற காற்றிலே அதன் மயக்கத்திலே ஈடுபட்டவாறு மெல்ல நடந்தனர்.
மெதுவாக பெல்டோபோரம் அவென்யூவைக் கடந்து அவர்கள் ஹாஸ்டலை நெருங்கினர். ஏழெட்டு சக மாணவிகள் கூட்டமாக ஹாஸ்டல் வாசலில் யாருடைய வருகையையோ எதிர்பார்ப்பதுபோல் நின்றிருந்தனர்.
"என்ன ரத்னா... பட்டாளம் நின்னுகிட்டிருக்கு...?”
"என்னவோ தெரியலே...”
"ஏதாவது தகராறோ....?”
ராதா தான் முதலில் கேட்டைக் கடந்து ஹாஸ்டலுக்குள் கால் வைத்தாள். பத்மஜா அருகில் வந்து அவள் கையைப் பிடித்தாள். ராதாவுக்கு ஏனோ ஒரு மாதிரியாக இருந்தது. நிமிர்ந்து பார்த்தாள். எல்லார் முகங்களில் ஓர் அனுதாபம். திடீரென்று அவளுக்கு ஓர் உள்நடுக்கம் தோன்றிற்று.
"ராதா... உன் செல்லை மறந்து வச்சுட்டுப் போயிட்டாயா...?”
"ஏன்...?”
"பத்து கால் வந்துடுச்சு...”
பிடிவிட்டு இருளில் எங்கோ வீழ்வதுபோல் ஒரு திகில் ராதாவைக் கவ்விற்று.
"எங்கே... யாரண்டேருந்து...”
இன்னும் இருவர் வந்து அவள் பக்கத்தில் நின்றனர். தோள்களைத் தொட்டனர்.
"யுவர் ஃபாதர் எக்ஸ்பைர்ட்...’
ரீடர் ராமாராவும் அவருடைய மனைவியும் நர்மதா ஹாஸ்டலுக்கு வந்தனர்.
"போன வாரம் கூட லட்டர் வந்துன்னு சொன்னியேடி கொழந்தே...” அங்கலாய்த்தாள் ரீடரின் மனைவி.
"மணி இப்ப ஏழாகறது... இப்ப பொறப்பட்டாக் கூட பத்தரை மணிக்குள்ளே பெங்களூர் போயிடலாம். அங்கிருந்து ப்ளைட் பிடிக்கலாம். ஒருவேளை அதிலே ஸீட் கெடச்சாலும் கெடைக்கலாம்...” ரீடர் ராமாராவ், ராதா போவதற்கான திட்டத்தை உரக்க சிந்தித்துக் கொண்டிருந்தார்.
"அப்பா... அப்பா...” ராதாவின் முகம் சிவந்து குழம்பிவிட்டிருந்தது.
"இங்கே அந்த ப்ளைட்ல டிக்கெட் கிடைக்கலேன்னாலும் பெங்களூர் பஸ் ஸ்டாண்டிலே டிக்கெட் கிடைக்கலாம். அப்படியில்லேன்னா பெங்களூரிலிருந்து பிரைவேட் வண்டிகள் உண்டு .”
ராதா ஒன்றும் மனசில் பதியாமல் யாரோ எதைப் பற்றியோ விவரித்துக் கொண்டிருப்பதைக் கேட்பதுபோல் நின்றாள்.
"ராதா...”
திடுக்கிட்டுத் திரும்பினாள். ஹாஸ்டல் வாசலில் கண்ணன் நின்றிருந்தான். கூட ரத்னா.
'கண்ணன்...’ என்று வாய்விட்டுக் கதறவேண்டும்போல் வயிற்றிலிருந்து ஒரு நிராதரவின் அலை சுருண்டெழுந்தது. மார்பைக் கடந்தது. ஆனால் அவள் கட்டுப்படுத்திக் கொண்டாள். ரீடர் ராமாராவும் சக மாணவிகளும் நிற்கின்றனர்.
அவள் மெதுவாகத் தலையசைத்தாள். கண்களிலிருந்து உருண்ட கண்ணீர்த் துளிகளின் ஸ்பரிசத்தில் அவள் துக்கம் சிலிர்த்து எழுந்தது.
"கண்ணன்...” ரீடர் தயங்கினார்.
"ராதா எங்க ஊர் சார். நான் ராதாவின் ஃபாதரோட ஸ்டூடண்ட்...”
"ஐ ஸீ... தென் ... டூ ஒன் திங்... ராதாவை ஏர் பஸ்ஸிலே ஸீட் கெடைச்சா ஏத்தி விட்டுடு... அப்படியில்லேன்னா பெங்களூர்லே ஏதாவது ஒரு வண்டியிலே ஏத்திட்டுத் திரும்பிடு...”
"இல்லே... சார்... நானும் கூட போறேன். துணையா இருக்கும்...”
"தென் இட்ஸ் குட்...”
கண்ணன் முதல் ராங்க் எடுத்து வருவதும், அவன் எல்லா ஆசிரியர்களிடமும் மரியாதையாக நடந்துகொள்வதும், அவனது கடுமையான உழைப்பும் கேம்பஸில் எல்லோரிடமும் அவனுக்கு ஒரு தனி மதிப்பை ஏற்படுத்தியிருந்தன. அனைவருக்கும் அவன்மீது ஒரு நம்பிக்கை.
ஆட்டோ காம்பஸ் எல்லையைக் கடந்ததும், டிரைவர் இருப்பதையும் மறந்து சூசூகண்ணன்...” என்று கதறிக்கொண்ட அவன் கழுத்தின் மீது சாய்ந்தாள் ராதா.
"ராதா... ராதா... தாங்கிக்கோம்மா....”
தம்மீது விழுந்து விம்மி விம்மி அழுகின்ற ராதாவின் முதுகை மெதுவாகத் தட்டிக் கொடுத்தான்.
மூன்று ஆண்டுகளாக அவளுக்குள் புழுங்கிய துக்கங்களின் அரக்கு முத்திரை தெறித்துத் தகர்ந்தது. அவள்"கண்ணன்... கண்ணன்...” என்று விம்மி விம்மி அழுது, தாம் ஏற்று வந்த தண்டனைகளுக்கெல்லாம் எவ்வளவு தகுதியற்றவள் என்று வெளிப்படுத்துவதுபோல் கதறினாள். ராதாவின் கண்ணீர் அவன் கழுத்தில் இறங்கி அவனது ஷர்ட் காலரினூடே வழிந்து மார்பை நனைத்தது.
பஸ் ஸ்டாண்டில் ஒரு ஸீட் மட்டும் கிடைத்தது.
"என்ன செய்யலாம் ராதா...?”
"நீ ஹாஸ்டலுக்குப் போ கண்ணன். நான் யோய்க்கறேன். அங்கே நீ வந்தா போலிஸுக்குத் தெரிஞ்சுடும்.”
ராதா மட்டும் பஸ் ஏறினாள்.[ தொடரும்]

No comments:

Post a Comment