8.தீக்குளிக்காத விட்டில்கள்
-----------------------------------------------------
"கம்பேக் லைலா... கம்பேக் கேர்ள்...” ரெக்கார்ட் ப்ளேயரில் அடிக்கடி கேட்டுக் கேட்டுப் புளிக்காத அந்தப் பழைய ரெக்கார்டில் ஓர் அமெரிக்கப் பாடகன் தவித்து உருகினான்; கெஞ்சிக் கதறினான்.
காப்டன் ஹயக்ரீவன் தமது விஸ்கிக் கோப்பையில் சோடாவின் நீர்க்குமிழ்கள் வெடித்துச் சிதறுவதை வேடிக்கை பார்த்தார். அந்தப் பெரிய உருவத்தை ஒரு குத்தூசிப் பார்வையோடு ராதா உற்று நோக்கினாள். சூஇந்த மனிதருக்கு பொறாமை உண்டாகுமா?’ சட்டென்று அவருடைய மனுஷ்யத்வத்தின் மீது அவளுக்கு ஐயம் தோன்றியது.
"கம்பேக் லைலா... கம்பேக் கேர்ள்...” கிடாரின் துயர உச்சம் ஒரு முத்திரை கொடுத்து ஓய்ந்தது. அவள் எழுந்து போய் ரெக்கார்டரை நிறுத்தினாள்.
"காப்டன்...”
"சொல் பேபி...”
"உங்களுக்கு ஸ்கூல்லேயோ, காலேஜிலேயோ கேர்ள் ஃப்ரண்ட்ஸ் இருந்திருக்காங்களா?”
காப்டன் ஒரே மூச்சில் விஸ்கியை வாயில் ஊற்றிக்கொண்டு உதடுகளைத் துடைத்துக் கொண்டார். அவர் கண்ணிமைகள் விஸ்கி நெடியின் தாக்குதலால் படபடவென்ற அடித்துக் கொண்டன.
"யூ மீன் பிஸிகல்லி... செக்ஸுவல் ரிலேஷன் ஷிப்...?”
"மண்ணாங்கட்டி பௌதிக ரசாயனமாய், ஆத்மீகமாய் காதலித்திருக்கிறீர்களா காப்டன்?”
"ஐ ஹாட் ரிலேஷன்ஷிப் வித் சம்... அதெல்லாம் சும்மா ஒரு ஃபன். காலேஜ் லைஃபின் கவுண்டர் பார்ட் மாதிரி...”
"ஸோ... யூ டோண்ட் நோ வாட் ஈஸ் லவ்?”
"இல்லே... இல்லே... இப்போ எனக்குத் தெரியறது.”
அவர் எழுந்து நின்று அவளை ஆதரவோடு பிடித்து அவள் உதடுகளுக்கு நேராக அந்த விஸ்கி கோப்பையைக் கொண்டு வந்தார். அவள் மெதுவாக விலக்கி விட்டு எதிரிலிருந்த டீப்பாயின்மீது உட்கார்ந்தாள்.
"உங்களுக்கு நான் ஒரு ஷாக் தரப் போறேன்”
"எனக்கா... ஷாக்கா...” அவர் ஹோவென்று உடம்பு குலுங்க குலுங்க விஸ்கி போதையில் சிரித்தார்.
"கம் ஆன் பேபி... கிவ் மி எ ஷாக்... நான் ஷாக் ப்ரூஃபாஇல்லையான்னு டெஸ்ட் பண்ணிக்கறேன்.”
அவரைப் பொறாமையால் வெந்து நீறு பூக்க வைக்க ஒரு வெறி தோன்றிற்று. ஒரு வேகம் தோன்றிற்று. கோபம் தோன்றிற்று.
"பள்ளிக் கூடத்திலே படிக்கறப்ப எனக்கு ஒரு பாய் ஃப்ரண்ட்இருந்தான்” அவள் அவர் முகத்தையே உற்றுப் பார்த்தாள். ஒரு சலனமுமில்லை.
"ஐ ஸீ...” வேறு யாருடைய கதையையோ கேட்கிற மாதிரி ஓர் அசுவாரஸ்யமான மரியாதையோடு அவர் கேட்டுக் கொண்டார்.
"அவனும் நானும் ஒன்னா காலேஜ்லேயும் படிச்சோம்.
அவன் ரொம்ப ஏழை, தலித். எனக்காக அவனை சாகச் சொன்னாக் கூட சாகத் தயாரா இருந்தான். பஸ்ஸுக்காக ஒரு வாட்டிகாத்துண்டு நிற்கறப்போ சைக்கிள்ளே ஒரு காலிப் பையன் என்னைப் பார்த்து விசிலடிச்சுண்டே போனான். யாருடைய சைக்கிளையோ பிடுங்கி அவனைத் துரத்திண்டு போய் அவனை இவன் உதைக்க... கூட்டம் கூடி பெரிய ரகளையாயிடுத்து.”
ஒவ்வொரு வாக்கியமாக... அவர் முகத்தின் ஒவ்வொரு சலனங்களையும் கிரகிக்கிற நிதானத்தோடு அவள் பேசினாள். காப்டன் மௌனமாக திலையை ஆட்டிக் கொண்டே அதைக் கேட்டார்.
"டிட் யூ லவ் ஹிம்?” இது அவர் கேள்வி.
"எஸ்” எந்த ஆணையும் அதிர வைக்கின்ற பொறாமையால் வெடித்துச் சிதறடிக்கும் பதிலை அவள் அமைதியாக, அவர் கண்களை நேருக்குநேர் பார்த்துக்கொண்டே சொன்னாள். அந்த பதிலைச் சொன்னபோது தானே சிருஷ்டித்த அந்தக் கொடிய சூழ்நிலையின் குரூரத்தைத் தாங்கமுடியாத அளவுக்கு மார்பு அடைத்து மூச்சு வாங்கிற்று.
காப்டன் ஹயக்ரீவன் போதையிலிருந்து பளிச்சென்று விடுபட்ட மாதிரி முழுத்தெளிவில் சாந்தமாக உட்கார்ந்திருந்தார்.
'அடுத்த கேள்வியைக் கேட்க தைரியமிருக்கிறதா காப்டன்... டு யூ லவ் ஹிம் ஸ்டில்.. கேட்கப் போகிறீர்களா.. அந்தக் கேள்வியை?’
"ஸோ... இதுதான் உன் ஷாக்கா? அவர் புன்னகை செய்தார். அந்தப் புன்னகையில் அவளுடைய இம்சித்துப் பார்க்கும் ஆவலை வெகு சுலபமாகக் கடந்து, கத்தி வெட்டிய வெண்ணெய் போன்று இளக்கமான ஒரு மனநெகிழ்வு மிளிர்ந்தது. ராதா அந்த சாந்தத்தின் முன்... அந்த நேசத்தின் முன் தான் மிகவும் குறுகிப் போனவளாக உணர்ந்தாள்.
"பேபி.. இதிலே எனக்கு ஒரு ஷாக்கும் இல்லே..., நான் அவ்வளவு அல்பம் இல்லே.. எங்கிட்டே வெளிப்படையா இதைச் சொல்ற அளவு உனக்கு சின்ஸியாரிட்டி இருக்கே.. ஐம் ஹாப்பி அபவுட் இட்... ஐ ஆம் ப்ரவுட் அஃப் யூ”
'மீண்டும் காப்டன் தான் ஜெயித்தார். அவர் முன்னால் நான் வெறும் பேபிதான்.'
அவர் ஜெயிப்பதோ, தோற்பதோ, அவரது பெருந்தன்மையோ மகிழ்ச்சியளிக்கவில்லை. அது தன் இயலாமைக்கு அவர் அணிகிற முகமூடி. ஆத்திரம் வந்தது...! எந்தவித மாற்றமும் இராத ஒரு அந்தஸ்து வலையில், தப்பித்தே போகமுடியாத கூண்டில் தான் சிக்கிக்கொண்டிருப்பதாக நினைத்தாள். அந்தக் கற்பனை நாளாக நாளாக வளர்ந்தது, அதற்கு ஒரு மாற்றாக காப்டன் மது அருந்தும் போதெல்லாம் தானும் கேட்டு வாங்கிப் பருகத் தொடங்கினாள். முதலில் அதில் ஒரு ஆறுதல் கிடைத்தது. தன்னைச் சற்று மறக்க அது உதவியது.
அப்போதெல்லாம் ஷியாம் சிங் என்ற கட்டுமஸ்தான, நீலக் கண்களில் புது மனைவியின் நினைவுகள்நிழலிடும் ஆணைப் பற்றி ராதா தன்னை அறியாமல் நினைத்துப் பார்க்கலானாள்.
இரவுகள் நீண்டிருக்கும்போது, பகல்கள் மந்தமாக நகரும்போது ஷியாம் சிங் வினயமாகச் சிரித்துக்கொண்டே அவள் முன் நின்றான். அவளது குற்றேவல்களுக்கு ஓடிவந்து வணங்கினான். மிஸஸ் மல்ஹோத்திராவைப் பற்றி... அவளையும் அவள் வீட்டு ஆர்டர் லியையும் பற்றிக் கேட்ட கதைகள், இலையுதிர் காலத்துச் சருகுகள்போல் காற்று கொண்டுவந்த குப்பைகளாய் மனசில் குவிந்தன. ராதா திடீரென்று ஒருநாள் விழித்துக் கொண்டாள்.
'நான் எங்கே போயிண்டிருக்கேன்? எனக்கு ஏன் இப்படி வெறி பிடிச்சுண்டிருக்கு... பகவானே.. ரங்கநாதா... என்னைக் காப்பாத்து..'
'வாழ்க்கைக்கு உத்தேசம் வேண்டும்... நோக்கம் வேண்டும். போக்கு வேண்டும் . உத்தேசமே வா...! எங்கிருந்தேனும் வந்து என்னைக் காப்பாற்று. மாமிச தாகங்களின் தணலிலிருந்து நான் குப்பையில் கொட்டப்படும் சாம்பலாகிவிடும் முன் காப்பாற்று.
ஒரு நாள் அவள் பத்திரிகையை நீட்டினாள்.
"என்னது இது?”
"இந்த அட்வர்டைஸ்மெண்டைப் படியுங்கோ”
காப்டன் ஹயக்ரீவன் படித்தார்.
கரஸ்பாண்டன்ஸில் பி.எட். படிப்பு சொல்லித் தருவதாக ஒரு வடஇந்திய ட்யூடோரியல் காலேஜ் கொடுத்திருந்த விளம்பரம்.”
"வாட்டு டூ விதி இட்...?”
"நான் மேலே படிக்கனும்னு ஆசைப்படறேன். டீச்சரி ட்ரெயினிங்குக்குப் போகனும்னு தோணறது?”
"படிச்சுட்டு...?” அவர் அவளை உற்றுப் பார்த்தார்.
"டீச்சராகணும்...! ஒரு ஸ்கூல் நடத்தனும்...! எனக்கு வாழ்க்கைக்கு ஒரு பர்ப்பஸ் வேணும்...! எனக்கு ஒரு காரியர் வேணும்...!"
"பட்... யூ ஆர் அன் ஆபிசர்ஸ் வய்ஃப்...”
"ஸோ வாட்...?”
காப்டன் ஹயக்ரீவன் ஒன்றும் சொல்லவில்லை.
"ஆபீசர் மனைவி..., ஒரு டீச்சராக இருக்கப்படாதா? "
காப்டன் ஹயக்ரீவன் பதில் சொல்லவில்லை. ஹாலின் மேலும் கீழும் உலாவினார். இரண்டு நாள்கள் அமைதியாக இருந்தார். மூன்றாம் நாள் அதைப் பற்றிப் பேசினார்.
"ஆல் ரைட் பேபி. நீ பி.எட். படி. மேலே எம்.எட் வேணும்னாலும் படி.. ஆனா இது ஒரு ஃப்ராட் விளம்பரம். இவா பணம் கறக்கற பேர்வழிகள். ஒரு ரெகுலர் காலேஜில் போய்ப் படிக்றது நல்லது.காப்டன் நரசிம்மராவோட அண்ணா ஒருத்தர் மைசூர்லே ரீஜனல் காலேஜ்லே ரீடரா இருக்காராம். அங்கே போய்ப் படிக்கறயா?”
ராதா உடனே அதற்குச் சம்மதம் தெரிவித்தாள். [தொடரும்]
No comments:
Post a Comment