Friday, 28 July 2017

தீக்குளிக்காத விட்டில்கள்: 13

தீக்குளிக்காத விட்டில்கள்: 13
பரீட்சைகள் ஒவ்வொன்றாகக் கழிந்துகொண்டே வந்தன. மைசூரில் தனது நாள்கள் விரல்விட்டு எண்ணுமளவு குறைந்துகொண்டே வருவதை ஒரு கலக்கத்தோடு ராதா உணர்ந்தாள். தூரத்தில் ஷில்லாங்..., மலைக் குளிர்..., விழித்திருக்க வேண்டிய இரவுகள்..., மந்தமான பகல்கள்..., சிக்கனும் விஸ்கியும், பெரேடும் பிரமோஷனும், ஆபீசர்களும் பார்ட்டிகளும்..., மிஸஸ் மல்ஹோத்ராக்களும், ஷியாம் சிங்குகளும்.
கடைசி பரிட்சை முடிந்தது. ஆட்டோ ரிக்ஷாக்கள் ஹாஸ்டல் சாலையில் பெட்டி படுக்கைகளோடு மைசூர் பஸ் ஸ்டாண்டையும், ரயில்வே ஸ்டேஷனையும் நோக்கிப் பறந்து கொண்டிருந்தன.
இனி எண்ணுவதற்கு நாள்கள் கூட இல்லை..., மணிகள்தான். இன்னும் எத்தனை மணி நேரம் இந்த மைசூர் வாழ்க்கை?
டாக்டர் ராமாராவிடம் பேசவேண்டும் என்று ஹாஸ்டவில் ரத்னாவுடம் சொல்லிவிட்டு வெளியே வந்தாள் ராதா. பெல்டோபோராம் அவென்யூ வழியாக பார்பர் ஷாப்பின் அருகில் கண்ணன் வந்து கொண்டிருந்தான். அவனைப் பார்த்ததும் தனக்குள் அவள் அடக்கி வைத்திருந்த உணர்ச்சிகள் குமுறிக்கொண்டு எழுந்தன. கண்ணனை நோக்கி அவள் வேகமாக நடந்து சென்றாள். அவளுடைய நடையில் வேகத்தைக் கண்டு ஏதோ நடந்துவிட்டதைப்போல் திடுக்கிட்டு அவன் நின்றான்.
“கண்ணன் உங்கிட்டே கொஞ்சம் பேசணும்.”
அவன் அமைதியாக நின்றான்.
‘தண்டனை போதும். இனிமேல் என்னால் தாங்க முடியாது. உன்கூட நான் பேசியே ஆகணும்என்று பதட்டத்தோடு அவள் சொன்னாள்.
அவள் முகத்தில் தான் தோற்றுவிட்டதை ஒப்புக்கொள்வதுபோல், கடைசியில் நான் ஒரு பெண்தான் என்று கெஞ்சுவதுபோல்
உணர்ச்சிகள் தெறித்தன. அவள் முகம் சிவந்து குழம்பியிருந்தது.
கண்ணன் அந்த உணர்வுகளை எதிர்பாரதவன்போல் விதிர் விதிர்த்து நின்றான்.
“ஓ யெஸ்...  பேசுவோம்.”
“இங்கில்லே கண்ணன். நடுரோட்டிலே இல்லே. வேறு எங்கேயாவது போய்ப் பேசுவோம்.”
“எங்கே போறது?”
“எங்கேயாவது போவோம்சாலையில் அவர்களைக் கடந்து செல்ல முயன்ற ஒரு ஆட்டோவை அவள் கைகாட்டி நிறுத்தினாள்.
கண்ணன் தயங்கினான்.
“ப்ளீஸ்... டோண்ட் கிரியேட் சீன். வந்து உட்கார்.”
கண்ணன் அவளது உணர்ச்சி வசப்பட்ட குரலுக்குத் தன்னையறியாமல் கீழ்ப்படிந்தான்.
“எல்லி ஹோக்திரி?” கன்னடத்தில் கேட்டான் ஆட்டோ டிரைவர்.
“பஸ் ஸ்டாண்ட்என்று சொல்லிக்கொண்டு தன் கையில் வைத்திருந்த வானிட்டி பேக்கைத் திறந்து அதில் எவ்வளவு பணம் இருக்கிறது என்று ஒரு நோட்டம் விட்டாள் ராதா. ஒரு சில்க் ஸாரி வாங்குவதற்காக டாக்டர் ராமாராவிடமிருந்து கைம்மாறாக வாங்கியிருந்த ரூபாயை திருப்பிக் கொடுப்பதற்காக அவள் வைத்திருந்த மூன்று ஆயிரம் ரூபாய் நோட்டுக்களும் சில சில்லரை நோட்டுக்களும் தெரிந்தன. அவள் வானிடி பாக்கை    மூடினாள்.
“கே. ஆர். எஸ் பிருந்தாவன்..., கே. ஆர். எஸ் பிருந்தாவன்என்று பிரைவேட் பஸ் கண்டக்டர் ஒருவன் கூவினான்.
“கண்ணன் பிருந்தாவனுக்குப் போவோமா?” என்று ஆட்டோவிலிருந்து இறங்கியதும் கேட்டாள் ராதா.
கண்ணன் அவளை அலசுவதுபோல் தீர்க்கமாகப் பார்த்தான்.
“நீ ஏதோ பேசணும்னு சொன்னே. நடுரோட்ல வேணாம், அப்படீன்னு மைசூருக்கு வந்தாச்சு. பேசவேண்டியதை இங்கே பேசினாலும் போதுமே.”
ராதாவுக்கு அவனது பேச்சு முகத்திலறைந்ததுபோல் இருந்தது. இன்னும் நீ என்னைத் தனியே நிற்க வைத்தும் புண்படுத்தப் பார்க்கறயா? செய் கண்ணன். ஆனால் நீ என்ன புண்படுத்தினாலும் இனிமேல் நான் புதுசா புண்பட்டுப் போறதில்லை என்ற பாவனையில், கலங்குகின்ற கண்களோடு அவனைப் பார்த்தாள் ராதா.
“ஏன் இப்படி என்னைப் பாடு படுத்தறே கண்ணன்?”
“ராதா நாம பிருந்தாவனம் தானே போகணும்? சரி வா.. நடஅவர்கள் இருவரும் பிருந்தாவனம் பஸ்ஸில் ஏறினார்கள்.
பிருந்தாவனத்தில் அன்று நல்ல கூட்டம். மனிதர்களின் உல்லாசங்களும், களிப்பும் பட்டாம்பூச்சிகள் போல பறப்பதாகத் தென்பட்டது. மலர்களும் மரங்களும், நீரூற்றுக்களும் வண்ண ஒளியும் நெகிழ்ந்தன. பிணிப்புகள் ஒரு கணநேரம் தங்கள் இருட்குகைகளுக்குப் பின் வாங்கின. வியாபாரிகளும், போட்டோ பிடிப்பவர்களும், நெகிழ்ந்து பலவீனமாக்கிக் கொண்டிருந்த  மனிதர்களை மொய்த்தார்கள். கட்டுப்படுத்தப்பட்டிருந் வேட்கைகள் அங்கே கிளர்ந்தெழுந்தன. வயதானவர்களுக்கு வாலிப நினைவுகள் மீண்டும் வந்தன. யௌவனம் அங்கே காற்றாக வீசியது. மலர்களாக முகிழ்ந்திருந்தது. நீரூற்றுகளாகத் தெறித்தது.
“கண்ணன்...! திடீர்னு கூப்பிட்ட அன்னிக்கி ஒரு வாரத்துக்கு முன்னால்தான் ஸ்ரீதர் அந்த சாராயம் விக்கிறவளோடே போயிட்டான். உனக்குத்தான் அது தெரியுமே. அந்த வீடு அப்போ எவ்வளவு துடிச்சிக்கிட்டிருந்ததுன்னு உன்னால ஊகிக்க முடியுமா?”
ராதா புல்தரையில் தன் எதிரே உட்கார்ந்திருந்த கண்ணனைப் பார்த்துக் கேட்டாள். அவன் தலை குனிந்திருந்தான்.
“உனக்கு நீ நினைச்சது உடனடியாக நடந்தாகணும் இல்லே... அப்படித் தானே?”
கண்ணன் பேசவில்லை.
“அன்னிக்கி நான் உன்னோடு புறப்பட்டு வந்திருந்தால், எவ்வளவு நல்லா இருந்திருக்கும்னு இன்னிக்கி நினைக்கிறேன். ஆனால் அன்னிக்கி அதைச் செய்யற அளவு ஒரு பலம் எனக்கில்லை. ஏதோ பிணம் விழுந்த வீடு மாதிரி ஒரு வாரத்திற்கு மேலே எங்க வீடு நிசப்தமாக இருந்தது. சிரிச்சுப் பேசறவா யாரும் சிரிச்சுப் பேசலே. அழவேண்டியா யாரும் அழுதுகூட அந்தத் துக்கத்தைத் தீர்த்துக்கல. இதையெல்லாம் உதறிவிட்டு வந்துடணும்னு மனசு துடித்தாலும், அவாளுடைய மனசை வேறு மாதிரி மிதிச்சிட்டு ஓடிவர்ற தெம்பு எனக்கில்லைராதா சட்டென்று நிறுத்திப் பின்னர் கேட்டாள்.
“நீ ஏன் பொறுத்திருக்கல்லே கண்ணன். நீ ஏன் புறப்பட்டுப் போனே?”
கண்ணன் தலைநிமிர்ந்து அவளைப் பார்த்தான்.
“இப்போ எதுக்கு அந்தப் பழங்கணக்கைப் புரட்டணும்? அதைத் தெரிஞ்சிக்கிட்டு என்ன நடக்கப் போவுது?”
ராதா அவனை ஓர் அம்பு தைத்த மான்போல் பார்த்தாள்.
“ராதா உன்னை நான் தண்டிக்கறதாகவும், உன் மனசை நான் புண்படுத்தறதாகவும் நீயா கற்பனை செஞ்சிக்கிறே. ஆனால், நாம் விரும்பினால்கூட ஒருவரையொருவர் நாம் தண்டிக்க முடியாது.’
“அப்போ நீ ஏன் என்னோட காலேஜிலே பார்த்துப் பேசவேயில்லை.”
“எதுக்குப் பேசணும்...? எதையாவது புதுசா ஆரம்பிக்கவா? உன்னுடைய  வாழ்க்கையிலே குறுக்கிட்டு, நீ போய்க்கிட்டிருக்கிற ஒரு பாதையிலே ஏதாவது பிரச்சனைகளை ஏற்படுத்தவா? நீ அங்கே படிக்க வந்திருக்கிறே. நானும் எதிர்பாராத விதமாக அங்கே படிக்க வந்திருந்தேன். பாதையிலிருந்து திசை மாறி எவ்வளவோ நாளாச்சு. நோக்கம் வேறயாப் போச்சு. நிலைமையும் வேறயாப் போச்சு. நான் என்ன பண்ணட்டும்? மறுபடியும் ஏன் ஒரு பழங்கணக்கைப் புரட்டணும்.”
“அப்போ எங்கிட்டே நீ எதையுமே வெளிப்படையாகச் சொல்லப் போவதில்லையா? அவள் உதடுகள் துடித்தன. புருவங்கள் துடித்தன. கண் இமைகளில் கண்ணீர் துளிர்தது.
“ஆல் ரைட்... இப்போ நான் சொல்றேன் கேட்டுக்கோ. நான் எப்படிப் படிச்சேன். எனக்கு என்ன சொத்து இருந்தது. உனக்கு நல்லாத் தெரியும். எங்க வீட்டில் சொத்துன்னு மிச்சம் இருந்தது ஒரே ஒரு பசுமாடு. அது ஒரு நாளைக்கு இரண்டுபடி பால் கறந்துக்கிட்டிருந்தது. எங்க அப்பா ஒரு  விவசாயக் கூலியாய் அன்றாடம் காய்ச்சியாய் கஷ்டப்பட்டு என்னைப் படிக்க வச்சார். நான் பி. எல். படிக்கப் போறேன்னு ஒரேபிடியாய் நின்னப்போ எங்க அம்மா அந்த மாட்டை வித்து அன்னக்கி சாந்திரம்தான் தொள்ளாயிரம் ரூபாய் காசைக் கொண்டுவந்து கொடுத்தாங்க. அன்னைக்கி நீ வருவேன்னு பதினொன்றரை மணிவரை நான் சைக்கிளோடு காத்திருந்தேன். நீ வரல்லை. நீ வரமாட்டேன்னு எனக்குத் தோணிடிச்சி. வீட்டிலிருந்த ஒரே சொத்தையும் வித்துப்  பெரிய நம்பிக்கையில் என் கையிலே அம்மா காசைக் குடுத்துட்டாங்க. இனி நான் அங்கே தங்கினா அதற்கு அர்த்தமில்லே. அந்த மாட்டை அம்மா அவ்வளவு பிரியமாய், பெரிய நம்பிக்கையோடு வளர்த்தாங்க. உன்னை எது வரவிடாமே தடுத்திச்சோ, அந்த மாதிரி என்னையும் பிறருடைய நம்பிக்கையைக் காப்பாத்தணும்னு ஒன்னு வெளியே துரத்துச்சு.”
“அப்புறம் நீ ஏன் பி.எல். படிக்கல்லே. நீ ஏன் நக்ஸல் ஆனே?”
“ராதா, என்னுடைய நண்பர் ஒருவர் லா காலேஜிலே தேர்ட் இயர் படிச்சிட்டிருந்தார். நான் நேரா அவரைத் தேடிப் போனேன். வக்கீல் தொழில் செய்யணும்னா என்னன்ன விதமான தகுதிகள் இருக்கணும்னு ஒரேநாளிலே எனக்குப் புரிஞ்சு போச்சு, வெறும் பொய்யை முதலாக வச்சு, பொய்யோட விளையாடிக்கிட்டு இந்தச் சீரழிந்துகிட்டுப் போற சமூகத்தோட சமரசம் பண்ணிக்கினாத்தான் சௌகரியமாய் வக்கீல் தொழில் பண்ண முடியும்னு எனக்குப் பளிச்சினு விளங்கிப் போச்சு. என் வேலை வழக்கு மன்றத்திலே இல்லை. இந்தச் சமூகத்துக்கிட்டதான் அப்படின்னு புரிஞ்சு போச்சு, அன்னிக்கி ராத்திரி ஒரு நக்ஸலைட் அந்த நண்பர் வீட்டிலே அடைக்கலம் புக வந்தார். இரண்டு நாள்கள் அவர் அங்கே தங்கியிருந்தார்.மூன்றாவது நாள்அவர் புறப்பட்டபோது நானும் அவர் கூடவே புறப்பட்டு விட்டேன். மீதிதான் உனக்குத் தெரியுமே”.
அவன் வாழ்வில்தான் என்னென்ன விளைவுகளை ஏற்படுத்தி விட்டோம் என்பதை ராதா உணர்ந்தபோது, பெரிய குற்றவாளி போல ஓர் உறுத்தல் அவளுக்கு ஏற்பட்டது.
“நேரமாச்சுஎன்று அவன் எழுந்தான்.
“இப்போதுதான் லைட் போட்டிருக்காங்க. மணி ஏழுதான் ஆகுது. உட்கார் கண்ணன். ஏன் என்னைக் கண்டு மிரண்டு மிரண்டு நீ ஓடறே?” என்று கேட்டாள் ராதா.
கண்ணன் நின்றுகொண்டே பதிலளித்தான்.
“எந்தச் சந்தர்ப்பத்திலும் யாரைக் கண்டும் நான் மிரளமாட்டேன். அது உனக்குத் தெரியுமே
“அப்போ உட்கார்
“இல்லை. எனக்கு இப்போ கட்டாயமா ஒரு காப்பி சாப்பிடணும் போல இருக்கு.”
“அடடே, ஆம் சாரி கண்ணன் காப்பி கூட சாப்பிட வைக்காம உன்னை இழுத்துட்டு வந்துட்டேன்என்று எழுந்தாள் ராதா.
“சரி... நட போவோம்.”
ஒரு திருவிழா உல்லாசம் போல் அவசரம் அவசரமாக இந்த வாழ்க்கை வழங்கிக் கொண்டிருக்கும் இன்பத்தைப் பருகிவிட வேண்டும் என்ற துடிப்போடு சஞ்சரித்த மனிதர்கள் மத்தியிலே அவர்கள் இருவரும் மெதுவாக நடந்து சென்றார்கள்.
கிருஷ்ணராஜ சாகரத்தைப் பார்ப்பதுபோல் கம்பீரமாக நின்றிருந்த அந்த ஆடம்பரமான ஹோட்டலுக்குள் இருவரும் நுழைந்தார்கள்.
“என்ன சாப்பிடறே?” என்று வெயிட்டர் வைத்துவிட்டுப் போன மெனுவைப் புரட்டிப் பார்த்தபடியே கேட்டாள் ராதா.
“எனக்கு ஒன்னும் வேணாம். ஒரு காப்பி மட்டும் போதும். உனக்கு என்ன வேணுமோ ஆர்டர் பண்ணு.”
ராதா அவனை வெறித்துப் பார்த்தாள். அவனை அள்ளித் தழுவி அவனோடு கலந்து முயங்கிக் கரைந்து போய்விட வேண்டும் என்ற தாகம் அவளுக்குள் உந்தியெழுந்தது.
“எனக்கு வேண்டியதை நான் ஆர்டர் பண்ண முடியாதுஅவள் குரலில் நேர்ந்த மாற்றத்தைச் சடக்கென்று புரிந்துகொண்டு அவளைத் திரும்பிப் பார்த்தான் கண்ணன். அவர்கள் அந்த மூலையில் தனியாக உட்கார்ந்திருந்தார்கள்.
“கண்ணன் எனக்கு நீ வேண்டும்...” ராதா மீண்டும் தொடங்கினாள்.
அன்றொரு நாள் பள்ளிகொண்டாவின் ஆற்றங்கரையில் அதே வார்த்தைகளை அவள் உச்சரித்தபோது உண்டான அந்தத் தூரத்து இடிமுழக்கம் ஒரு சங்கேத ஒலிபோல் அவன் மனசில் கேட்டது.
வெயிட்டர் வந்து நின்றான்.
ராதா இரண்டு ஸ்வீட்டுகளுக்கு ஆர்டர் கொடுத்தாள்.
வெயிட்டர் அகன்றான்.
தான் கேட்டதற்கு அவன் இன்னும் பதில் தரவில்லையே என்று கேட்பதுபோல் அவனை அவள் பார்த்தாள்.
“ஸாரி...” என்று பதில் வந்தது.
அவள் தலைகுனிந்தாள்.
ஸ்வீட் வந்தது. அதை முடித்ததும் இரண்டு காரம், பின்னர் காப்பி. வெயிட்டர் டிரேயில் பில்லைக் கொண்டுவந்து வைக்கும் வரையில் அவர்கள் மௌனமாகச் சாப்பிட்டார்கள். பில் வந்தது. அவன் கொடுப்பதற்கு முன்னால் அவள் அதைத் தடுத்துவிட்டு வானிட்டி பாக்கைத் திறந்து ஒரு ஆயிரம் ரூபாய் நோட்டை ட்ரேயில் வைத்தாள். சில்லரை மாற்றி வருவதற்காக வெயிட்டர் கவுண்டருக்குப் போனான்.
“ஸாரி...” என்றாள் ராதா.
“எதற்கு...?” என்று கேட்டான் கண்ணன்.
“ரொம்ப வெளிப்படையாக நடந்துகிட்டேன் அதுக்கு...”
கண்ணன் பதில் சொல்லவில்லை.
கவுண்டருக்கு எதிரில் நின்றிருந்த கூட்டத்தில் பில் கொடுக்கும் ஆள்கள் நகரட்டும் என்று காத்திருந்த வெயிட்டரை இங்கிருந்தபடியே பார்த்துக்கொண்டு ராதா தொடர்ந்தாள்.
“உங்கிட்டே கதறி அழணும்னு எத்தனையோ சந்தர்ப்பங்கள் எனக்குத் தோணியிருக்கு கண்ணன். எத்தனையோ இரவுகள் உன்னை நினைச்சிக்கிட்டு ஷில்லாங்கிலே தூக்கம் வராமல் புரண்டுக்கிட்டிருந்தேன் கண்ணா... பட், நௌ ஃபீல் ஸாரி...!”
ஏதோ ஒரு அசம்பாவிதமான சூழ்நிலையில், தர்மசங்கடமாகச் சிக்கிக் கொண்டவன்போல் கண்ணன் உட்கார்ந்திருந்தான்.
“நீ என்ன நினைக்கிறேன்னு எனக்குத் தெரியாது. உன் மனசுலே என்னைப் பற்றி இருந்த சித்திரம் அழிஞ்சு போச்சு இல்லே...” அவள் கண்களில் கண்ணீர் துளிர்த்தது. திடீரென்று அவள் குரல் கம்மிற்று.
“கண்ணன் நான் இன்னொருத்தர் மனைவிதான். ஆனால் பேரளவுக்கு மட்டும்தான் மனைவி. கண்ணன்... என் வாழ்க்கை ஒரு பெரிய ஏமாற்றம், கண்ணன்... யூ நோ... நான் ஏன் பி.எட். படிக்க வந்தேன் தெரியுமா? எனக்கொரு போக்கு வேணுமின்னு இல்லே, ஷில்லாங்கிலே தூக்கம் வராத ராத்திரிகள் என்னைத் துரத்த ஆரம்பிச்சபோது எனக்கே என் மேல பயம் வந்திடுத்து கண்ணன்...! மை லைஃப் ஈஸ் கிராண்ட் இல்யூஸன்அவள் திடீரென்று வெடித்து விம்மிக் கொண்டே தன் கைக்குட்டையில் முகம் புதைத்துக் கொண்டாள். [தொடரும்]


No comments:

Post a Comment