Friday, 21 July 2017

தீக்குளிக்காத விட்டில்கள் :11

தீக்குளிக்காத விட்டில்கள் :11
-----------------------------------------------
எட்டு நாள்கள் கழித்து காப்டன் ஹயக்ரீவனோடு மைசூருக்கு வந்தாள் ராதா. வாடித் தளர்ந்து போயிருந்தாள்.
"நேக்கு லீவில்லே. நைட் ட்ரெய்ன்லே கௌம்பனும். ராதா உங்க குழந்தை மாதிரி. தோப்பனார் டெத்லே ரொம்ப அப்ஸெட்ஆய்ட்டா. நீங்கதான் கவனிச்சுக்கனும்” என்று ரீடர் ராமாராவிடம் சொன்னார் காப்டன் ஹயக்ரீவன்.
"ஷ்யூர்லி... நீங்க கவலைப்படாம போய்ட்டு வாங்கோ... நாங்க இருக்கறோம்; பார்த்துக்கறோம். அவ நல்லா பிக்கப் பண்ணுவா. இப்பவே நல்ல ராங்க்தான் ஸ்கோர் பண்ணிகிட்டிருக்கா.”
ராதா விடம் ரீடரின் மனைவி ,கிருஷ்ணமாச்சாரி மரணம் பற்றி விசாரித்துக் கொண்டிருந்தாள். 
"ஹவ் ஈஸ் மிஸ்டர் கண்ணன்?” ஹயக்ரீவன் கேட்டார்.
"கண்ணன்... விச் கண்ணன்...?”
"ராதாவோட க்ளாஸ்மேட்...”
"ஓ.... தட் சாப்... அவனைத் தெரியுமா உங்களுக்கு?”
"ரயில்வே ஸ்டேஷன்வே மீட் பண்ணேன்.”
"அவன் தான் பர்ஸ்ட் ராங்க் வாங்கறான். வெரிகுட் சாப், ஹானஸ்ட் அண்ட் டீஸண்ட்.” ரீடர் சான்றிதழ் வழங்கிக் கொண்டிருந்தார்.
கண்ணனின் பெயர் காதில் விழுந்ததும் ராதா, ரீடரின் மனைவியிடமிருந்து கவனத்தை அங்கே திருப்பினாள்.
"எஸ்... எஸ்... எ... நைஸ்.... கய். மே ஐ மீட் ஹிம்?”
"ஓ...எஸ்... ப்யூன் வீரய்யா வருவான். சொல்லி அனுப்பறேன்.”
வீரய்யா வந்ததும் ராமாராவ் கங்கா ஹாஸ்டலுக்கு அவனை அனுப்பி கண்ணனை அழைத்து வரச் செய்தார்.
கண்ணன் மிகவும் தர்மசங்கடத்தோடு வந்து நின்றான்.
"ஹலோ...” காப்டனின் பெரிய கரம் மீண்டும் அவனை நோக்கி நீண்டது. அவன் வேறுவழியின்றி அதைப் பற்றிக் குலுக்கினான்.
வீட்டு வேலைக்காரி டீ கொண்டு வந்தாள்.
"ஈக ஒந்து கப்பு.”
இன்னொரு கப் டீ கொண்டு வர உள்ளே போனாள் வேலைக்காரி.
"ஹவ் ஈஸ் யுவர் ஸ்டடீஸ்?
"கண்ணன்தான் பர்ஸ்ட் ராங்க். உங்களுடைய ஒய்ஃபுக்கும் அவனுக்கும்தான் ராங்க்லே கடும் போட்டி.” என்றார் ராமாராவ்.
"ஓஹ்ஹோஹ்ஹோ” என்று குலுங்கிச் சிரித்தார் காப்டன். அந்தப் பெரிய ஆகிருதி சிரிப்பிலே குலுங்குவது ரசமாக இருந்தது.
மூவரும் டீ குடித்தனர்.
"ஹவ் அபௌட் எ வாக்...?”
"எனக்கு வேலையிருக்கு... நீங்க போய்ட்டு வாங்களேன்...” ரீடர் ஒதுங்கினார்.
"மிஸ்டர் கண்ணன்?” அவன் தயங்கினான்.
"கம் ஆன் லெட்ஸ் ஹாவ் எ வாக் ராதா?”
"எனக்கு ரொம்ப களைப்பா இருக்கு... நீங்க போய்ட்டு வாங்க.”
எங்கே அவளும் வர சம்மதித்து விடுவாளோ என்று கண்ணன் பயந்தான். இப்போது நிம்மதி.
"சரி... வி கோஃபார் எ வாக்.”
கண்ணனுக்குத் தர்மசங்கடத்தின் உச்சம்.
அவர்கள் ராஜேந்திரா இஞ்சினீயரிங் காலேஜ் வழியாக கங்கோத்ரி பஸ் டெர்மினஸ் நோக்கி நடந்தனர். ஏதோ ஒரு போராட்டத்தின் விளைவாக அன்றைக்கு பஸ் கைப்பற்றும் நாள். ஏற்கெனவே கண்ணன் கேள்விப்பட்டிருந்தான். இப்போது மூன்று பஸ்களை டெர்மினஸிலிருந்து கடத்திக் கொண்டுபோய் இஞ்சினியரிங் காலேஜ் காம்பஸ்க்குள் நிறுத்தியிருந்தனர். மாணவர்கள் கூட்டம் எங்கும் பொங்கி வழிந்தது. எல்லோருக்கும் ஒரு த்ரில். இரண்டு பேர் பஸ்ஸின் மீது ஏறி ட்விஸ்ட் ஆடிக் கொண்டிருந்தனர். நாலைந்து பேர் தடால் தடாலென்று பஸ்ஸின் பாடிமீது குதித்தனர். டிரைவர்கள் மூவரும், ஒரு அதிசயமும் நடந்துவிடவில்லை என்ற பாவனையில் நின்று கொண்டிருந்தனர். ஒரு டிரைவர் தன் சிகரெட்டைப் பற்ற வைத்துக்கொண்டு இன்னோருவருக்குத் தீக்குச்சியை நீட்டினார்.
பெரிய ஆகிருதியோடு நடந்து வரும் காப்டன் ஹயக்ரீவனைப் பார்த்து கூட்டத்தில் ஒரு நிசப்தம் உண்டாயிற்று. பாதையின் இருபுறமும் கூடி நின்றனர். காப்டன் மெதுவாக நடந்தார்.
"நீவு போலிஸ் ஆபீசரா?"
"நோ... நோ.. ஜன் ஜஸ்ட் எ புவர் கெஸ்ட்.”
இருவர் தம் வெற்றிக் களிப்பிலே அவர் கலந்துகொண்டதற்காகச் சிரித்தனர்.
"எதுக்காக இப்படி?” என்று கண்ணனை விசாரித்துக்கொண்டே காப்டன் நடந்தார்.
"அவங்களுக்கு இன்னும் மூணு பஸ் வேணுமாம்.”
"அதனாலே இருக்கிற மூணு பஸ்ஸையும் கைப்பற்றிக் கிட்டாங்களா... தட்ஸ் எ ஸ்டராடஜி.”
"வட இந்திய மாணவர்களைவிட இவர்கள் மேல்...! அவர்கள் பஸ்ஸைக் கொளுத்தி விடுவார்கள்.”
"இவங்களும் கூடச் செய்வாங்க. அதுக்கு மேலேயும் போவாங்க. மாணவர்கள் எல்லா இடத்திலும் ஒரே மாதிரிதான்.”
"அப்படியா... இது அவர்களுக்கு ஒரு வயது. இன்னும் பெரியவர்களாகும்போது பஸ் கொளுத்துவதைப் பற்றி இவர்களே கோபப்படுவார்கள்; கவலை தெரிவிப்பார்கள்."
அதற்கு கண்ணன் பதிலளிக்கவில்லை.
இருபுறங்களிலும் கொன்றை மரங்கள் மார்கழிக் காற்றில் சிலுசிலுத்தன.
"மிஸ்டர் கண்ணன், நீங்களும் ராதா ஸ்கூல்லேயே ஒண்ணாப் படிச்சிங்களா?”
"ஆமாம்”
"உங்களுக்கு எந்த ஊர்?”
"பக்கத்திலேயேதான்..., ரெண்டு மைல்.”
"கிருஷ்ணமாச்சாரியார் கிட்டே நீங்களும் படிச்சீங்களா?”
"ஆமாம்.”
"அவருடைய ஈமச்சடங்குக்கு நெறைய மாணவர்கள் வந்தாங்களாம்.”
"இருக்கும்... அவர் ஒரு பெரிய மனிதர்” அவன் குரலில் கிருஷ்ணமாச்சாரி மீதிருந்த மரியாதை வெளிப்பட்டது.
"எனக்கு மெஸெஜ் கெடைச்சு, நான் ப்ளேன் பிடிச்சுப் போறதுக்குள்ளே ரெண்டு நாள் ஆகிவிட்டது. அப்புறம் கூட வெளியூரிலேருந்து மாணவர்கள் வந்து போனார்கள். அவங்க பேசினதைக் கேட்கிறப்போ எனக்கு சிலிர்த்தது. இவ்வளவு அற்புதமான மனிதரா அவர் என்று தோன்றியது.” ஹயக்ரீவன் பேசிக்கொண்டே போனார் 
கண்ணன், அவர் எந்த நோக்கத்தோடு தன்னை வாக்கிங்குக்கு அழைத்து வந்திருக்கிறார் என்று ஆலோசித்துக் கொண்டு மெதுவாக நடந்தான்.
"அப்படிப்பட்ட வாத்தியார்கிட்ட படிக்கறதுக்குக் கொடுத்து வச்சிருக்கனும். ம்...ம்... எல்லாமே மாண்டு போறது. கடைசியிலே எல்லாமே மரணத்தின் சன்னதியிலே முடிஞ்சு போறது” என்றார் காப்டன்.
"மிஸ்டர் கண்ணன் உங்களுக்கு எதுவும் அவசர வேலை இல்லையே? என்று கேட்டார் கேப்டன்.
"ஏன் அப்படிக் கேட்கறீங்க?”
"இங்கே எங்கேயாவது கொஞ்ச நேரம் உட்கார்ந்து பேசுவோமா?”
"ஓ... யெஸ்...”
அவர்கள் இருவரும் சாலையைக் குறுக்கே கடந்து எதிரில் இருந்த ஒரு சிமெண்டுப் பெஞ்சின்மீது போய் உட்கார்ந்தார்கள்.
முதலில் யாரோவான தற்போது ராதாவின் கணவனான இந்த மனிதரிடம் திடீரென்று ஒரு மரியாதை கலந்த ஈடுபாடு உண்டானதை ஆச்சரியத்தோடு கண்ணன் உணர்ந்தான்.
முதன்முதலில் மைசூர் ரயில்வே ஸ்டேஷனில் தன்னுடைய ராதாவின் அருகில் மாமிச மலைபோல் நின்றிருந்த இந்த மனிதனின்மீது உண்டான ஓர் அருவறுப்பு இப்போது மங்கிப் போனதையும் அவன் உணர்ந்தான்.
"மிஸ்டர் கண்ணன், டு யு ஸ்மோக்?” என்று கேட்டவாறே ஒரு சிகரெட் பாக்கெட்டை எடுத்து நீட்டினார் காப்டன்.
"நோ தாங்க்ஸ்”
காப்டன் ஒரு சிகரெட்டை எடுத்துப் பற்ற வைத்தார்.
"யூ... நோ. மிஸ்டர் கண்ணன்...! எனக்கு நெருங்கின நண்பர்கள்னு யாரும் கிடையாது. இருக்கிறவாள்ளாம் கோ- ஆபிஸர்ஸ்தான். அவாகிட்ட மனசுவிட்டு எதையும் பேச முடியாது. பேசினாலும் அவாளுக்கு இதெல்லாம் புரியாது.” அவர் ஒரு கணம் மௌனமானார். 
"மரணம் பற்றி எனக்கு இருக்கிற சூன்ய உணர்ச்சிக்கு ஒரு வேளை ராதாவும் காரணமாக இருக்கலாம். ராதா மட்டும்தான் என் வாழ்க்கையிலே எனக்கிருக்கிற ஒரே பிடிப்பு. அவளும் இவ்வளவு தூரம் தாண்டி வந்து... அவள் பி.எட் படிக்கறதிலே எனக்கு அந்தச் சூன்ய உணர்ச்சி அதிகப்பட்டுத் தோணுது.”
காப்டன் தன்னை இதற்காகத்தான் இவ்வளவு தூரம் வாக்கிங்குக்கு அழைத்து வந்திருக்கிறார் என்று அவனுக்குப் புரிந்தது.
அவருக்கு எல்லாமே தெரிந்திருக்கிறது. அதனால் ஏதோ பயம் பிறந்திருக்கிறது என்று எண்ணியபோது, 'என் மனைவியை நீ பறித்துக்கொண்டு போய்விடாதே’ என்று பரிதாபமாக ஒரு மனிதன் கெஞ்சுவதுபோல் அவனுக்கு உறைத்தது.
'இது என்ன துயரமான வேடிக்கை' என்று அவன் தனக்குள் கசப்பாகச் சிரித்துக் கொண்டான். 
அவர்மீது அவனுக்குப் பரிவு தோன்றியது.
"ஸார். நீங்க ஏன் ராதாவை பி.எட் படிக்க அனுமதிச்சீங்க?”
"ஷில்லாங் வாழ்க்கை அவளுக்கு ரொம்பப் போர் அடிச்சுப் போச்சு. தனக்குன்னு ஒரு தொழில் வேணும்னு அவ கேட்டா, ராதா கேட்கற எதையும் என்னால மறுக்க முடியாது. அதனால்தான் அவளைப் படிக்க அனுப்பிச்சேன்” என்றார் காப்டன்.
"நீங்க பயப்படறதிலே அர்த்தமேயில்லே. இன்னும் ஐந்து மாதம் கழிச்சா ராதா மறுபடியும் ஷில்லாங்குக்கு வந்துடுவாங்க. தென்... எல்லாம் சரியாப் போயிடும்” என்று அவரது வெளியிட முடியாத பயங்களையெல்லாம் ஒரு ஒற்றைக் கோட்டில் அடித்து நீக்குவது போல் அவன் இங்கிதமாகத் தெரிவித்தான்.
"மிஸ்டர் கண்ணன், நீங்க சொல்றது சரியாய் இருக்கலாம். ஒரு மனிதனின் மரண பயம் அவனுக்குச் சொந்தமான ஒருத்தி தூரத்திலிருக்கறப்போ மிகைப்பட்டுத் தோணினாலும் தோணலாம்” அவர் மீண்டும் சிகரெட்டை ஆழ்ந்து உறிஞ்சிவிட்டு, தலையில் ஹெல்மெட்டோடு ஒரு பெண்ணின் கரங்கள் தன்னைக் கட்டித் தழுவிக் கொண்டிருக்கிற பெருமிதத்தில் அநாயாசமாக மோட்டார் சைக்கிளில் செல்லும் இளைஞனின்மீது பார்வையைச் செலுத்திய படியே "நீங்க ஏன் டீச்சராகணும்னு தீர்மானிச்சீங்க?” என்றார்.
இவரிடம் எந்த அளவு வெளிப்படையாக இருப்பது என்று எடை போடுவதுபோல் கண்ணன் அவரை ஒருமுறை கூர்ந்து பார்த்துவிட்டு யோசித்தான்.
"நீங்க எங்கிட்ட வெளிப்படையாக இருக்கனும்னு உங்களை நான் காம்பல் பண்ணலே. ஜஸ்ட் இட்டீஸ் எ கொஸ்டீன்.”
அவன் மெதுவாகச் சிரித்தான்.
"ஸார் நான் எதுக்கும் எதையும் மூடிவைக்க வேண்டியதில்லை. எனக்கு எது மேலயும், யார் மேலயும் பயமில்லை.” இதைச் சொல்லிவிட்டு, எங்கிருந்து ஆரம்பிப்பது என்று அலசுவதுபோல் அவன் யோசித்தான். 
காப்டன் காத்திருந்தார்.
"நான் போன வருஷம் வரையிலும் ஒரு நக்ஸலைட், வேலையில்லாத் திண்டாட்டத்தினாலேயோ, அட்வெஞ்சருக்காகவோ, விரத்திகளுக்காகவே நக்ஸலைட்டா பலபேர் மாறிப் போறாங்களே... அந்த மாதிரியில்லே. ஒரு சித்தாந்தத்தோட இந்தச் சமூகத்தில் அதலபாதாளமான அந்தஸ்து வித்தியாசங்களுக்காக மனம் கொதிச்சுப் போய் இந்த வழியிலே புரட்சி வந்திடும்னு நம்பி நக்ஸலைட்டானேன். ரெண்டு கொள்ளை வழக்கிலே நான் சம்பந்தப்பட்டேன். ஒரு கொலையின்போது என்னை அதிலே சம்பந்தப்படுத்த என்னுடைய நக்ஸலைட் தோழர்கள் முயற்சி பண்ணாங்க.
அன்னிஹிலேஷன் ஓர் அத்தியாவசியம்னு வெறிபிடித்த மாதிரி அவங்க வாதாடினாங்க. கொலைக்குக் குறிவச்சிருந்த அந்த ஆள் யாரோ ஒரு கிராமத்து நிலச்சுவான்தார். எல்லாரையும் போலத்தான் அவனும் வட்டி வாங்கினான். வேலைக்காரர்களைக் கசக்கிப் பிழிஞ்சான். கள்ளக் கணக்கு எழுதினான். போலீஸ்காரங்களுக்கு பார்ட்டி கொடுத்தான். இந்தச் சமூகத்திலே நடக்காத எந்த அபூர்வமான தப்புக்களையும் அவன் செய்துடலே. சொல்லப்போனா பல பேரைக் கொன்று, பல பேருடைய இரத்தத்தை உறிஞ்சி, சட்டத்தின் பக்கபலத்திலே அவனைவிடப் படுமோசமான குற்றங்களைச் செய்துட்டு ரொம்ப சௌகரியமா பொழைச்சிக்கிட்டு இருக்கிற பல பெரிய மனுஷங்களை எனக்குத் தெரியும். அவங்களையெல்லாம் விட்டுட்டு இவனை மட்டும் என் நண்பர்கள் தேர்ந்தெடுத்துக் கொன்னுடறது, சமூகப் புரட்சிக்கு எங்கே வழிவகுக்கப் போகுதுன்னு எனக்குத் தெரியலே. என் வாதங்கள் அவங்களுக்கு நான் ரொம்ப பிற்போக்கானவன்னு ஓர் அபிப்பிராயத்தை ஏற்படுத்தி இருக்கும்... அந்தக் கொலைக்கு அவங்க என்னை விட்டுவிட்டுப் போனாங்க. அந்த நிலச்சுவான்தார் வெட்டிக் கொல்லப்பட்டான். அவனுக்கு ரெண்டு பெண் குழந்தைங்க. அவன் பொண்டாட்டி புருஷனை வெட்டிக் கொல்லும்போது துணிவா தடுத்திருத்கா. அப்போ கையிலும், முகத்திலும் அவளுக்கும் ஒரு வெட்டு விழுந்திருக்கு. அவளை நான் கோர்ட்டிலே பார்த்தேன். அப்பாவி மாதிரி ரெண்டு பெண் குழந்தைகளைக் கையிலே பிடிச்சிட்டு அவ சாட்சிக் கூண்டிலே வந்து நின்னா.
"ஸார், ஐ ஆம் நாட் சென்டிமெண்டல்...! அவளுடைய தாலி அறுந்ததைத் தவிர அந்த ஊரில் எந்தச் சமூகப் புரட்சியும் நடக்கல்லே. ஆனா என்னை ஒரு ரகசியமான சந்தேகத்தோடு ஓர் உளவாளியை நடத்தற மாதிரி நடத்த ஆரம்பிச்சாங்க. அதுக்காக மனச்சாட்சிக்கு விரோதமா எந்தச் சமாசாரத்தையும் பண்ணி ஒரு கைதேர்ந்த கிரிமினலா மாறிடறதிலே எனக்கு நம்பிக்கை ஏற்படலே.
"அவங்களுடைய இந்த வேவு மனப்பான்மை, என்னை எனக்கே ரொம்ப தரக்குறைவாக்கிடுச்சி. திடீர்னு எனக்கு ஊருக்குப் போகணும்னு தோணிடிச்சி. ஆனால் அப்படிப் போற சுதந்திரம் எனக்கு இல்லைன்னு புரிஞ்சபோது அங்கிருந்து தப்பி ஒடணும்னு தீர்மானிச்சேன். நான் ஊருக்குப் போனவுடனே போலிஸ் என்னை சேஸ் பண்ணிடுச்சி. நான் ராதாவினுடைய அப்பாவின் உதவியினால்தான் தப்பிச்சு வந்தேன். அப்பவும் எனக்குப் போலிஸ் கிட்ட பயமில்லை. ஆனா ஏதோ செய்யவேண்டிய வயசிலே இன்னாக்டிவ்வா மாறி ஜெயில்லே உக்காந்துக்கிட்டிருக்கிறதிலே ஒரு வீழிச்சி தெரிஞ்சது. அன்னிக்கு ராத்திரி எங்க வாத்தியார் கிருஷ்ணமாச்சாரி கிட்டே ரொம்ப நேரம் பேசினேன். அவர் புதுசா ஒண்ணும் சொல்லலை. எதையாவது உருவாக்குன்னு சொன்னாரு. மனுஷனைத் தவிர வேறு என்னத்தை உருவாக்கறது? குழந்தைகளை உருவாக்கலாம்; புரட்சியை உருவாக்க வேண்டியது அவங்க தானே. இந்த யோசனையோடுதான் நான் கோலாருக்கு வந்தேன். இந்த ஆசிரியர் தொழில் மேலே அப்போ எனக்கொரு ஈடுபாடு ஏற்பட்டிச்சு. நான் தமிழ்நாட்டுல படிக்க முடியாது. அங்க என் பேர்லே போலீஸ் ரிக்கார்டு இருக்குது. அதனால இங்க வந்தேன்” என்று நிறுத்தினான் கண்ணன்.
நிறுத்தி நிறுத்தி ஆழ்ந்த யோசனையோடு அவன் பேசி வந்ததை முற்றிலும் கிரகித்துக் கொண்டவர்போல் காப்டன் ஒரு பெருமூச்சு எறிந்தார்.
"யூ ஆர் ரைட்...! மிஸ்டர் கண்ணன் மனுஷனைத் தவிர உருவாக்க வேண்டியது வேறெதையும் இல்லை. புறப்படுவோமா? ரொம்ப டைம் ஆயிடுச்சி இல்லை” என்று சொல்லிவிட்டு அவர் எழுந்தார்.
ஒரு மாலை நேரத்து வாக்கிங்குக்காகப் புறப்பட்டு எந்தப் பயத்திலோ தவித்துக் கொண்டிருக்கும் ஒரு மனிதரின் பீதியைக் குறைக்கப் போய் இப்படித் தன்னை வெளியிட்டு விட நேர்ந்த விந்தையை எண்ணிப் பார்த்தவாறு அவன் அவரோடு மெதுவாக நடக்கலானான். ஹயக்ரீவன் மீது அவர் ராதாவின் கணவர் என்பதை மீறி ஒரு ஈர ஈர்ப்பு ஏற்பட்டது.[தொடரும்]

LikeShow more reactions
 Comment

No comments:

Post a Comment