3.தீக்குளிக்காத விட்டில்கள்
சன்னதித் தெருவின் அக்ரஹாரம் க்ஷீணித்து ஆண்டுகள் பலவாயின. பள்ளிகொண்டானில் பள்ளி கொண்டிருக்கும் உத்திர ரங்கநாதருக்கு உற்சவ காலங்களிலும் கல்யாண முகூர்த்தங்களிலும்தான் பக்தர்கள் தரிசனம் கிட்டும். பக்தியைப் போன்று வருமானமும் சுருங்கவே - அக்ரஹாரத்தில் பட்டர்கள் நிறைந்து திவ்வியப் பிரபந்தமும் திருப்பாவையும் ஒலித்த காலம் மலையேறி, வயிற்றுப் பிழைப்பிற்காக பட்டாளம், ஹோட்டல், கம்பெனி உத்தியோகம் என்று பலர் பரதேசம் போய்விட, சிலர் மிஞ்சினர். அதிலே இருவரில் ஒருவர்,
அரங்கனுக்கு அடிமை செய்து அவன் திருவடிகளே சரணமாய் இந்த ஆயுள் கழிந்து போகட்டும் என்ற வைராக்கியம் பூண்ட நரசிம்மாச்சாரியார். அவருடைய அறுபது வயதில் அவரது ஒரே மகன் ஸ்ரீதரன்
"நீர் ஒம்ம ரங்கநாதனையே கட்டிண்டு அழும்” என்று சாராயம் விற்கும் ஒரு சக்கிலியப் பெண்ணோடு ஹாங்காங் போய்விட்டான்.
அவர் தம்பி கிருஷ்ணமாச்சாரி ஹைஸ்கூல் வாத்தியாராக இருந்து ரிட்டயராகி இரண்டு வருஷமாகப் போகிறது. நெற்றியில் திருச்சின்னமும் தலைப்பாகையும் கோட்டுமாய் பள்ளிக்கொண்டாவின் கடைவீதி வழியே அவர் பள்ளிக்கூடத்திற்கு சைக்கிளில் போனால், குதிரைமீது பவனி வரும் மைசூர் திவானின் கம்பீரம் நிழல் தட்டும்.
அவர் சைக்கிளில் போனால் மளிகைக் கடை முனுசாமி செட்டியார்,. ஜவுளிக்கடை நாதமுனி நாயுடு, கசாப்புக் கடையில் கறிவெட்டும் காதர் மொகித்தீன் என்று வரிசையாக எழுந்து நிற்பார்கள். கூம்பி நிற்கும் கைகளுக்குத் தலையை அசைத்து அசைத்துப் பதிலளித்துக்கொண்டே போவார் கிருஷ்ணமாச்சாரி.
வகுப்பறைகளில் வகுப்பு மணி அடிப்பதை மறந்துபோய் கலகலவென்ற வெண்கல நாதமாக அவர் குரல் ஒலிப்பதில் மயங்கி உட்கார்ந்து இரண்டு தலைமுறைகள்அவரிடம் பாடம் கேட்டிருக்கின்றன.
அவருடைய மகள் ராதா, ஹையர் செகண்டரி படிக்கும் மணிவண்ணனும் அவன் தங்கை சூடாமணியும் கூட அவரிடம் படித்தவர்கள்தான். பசுமாத்தூர்சேரியிலிருந்து மதிய உணவில்லாமல், பள்ளிக்கூட சத்துணவை நம்பி ஆறு கடந்து நடந்து வந்த கண்ணன் என்ற காத்தவராயனும் அவரிடம் படித்தவன்தான்.
அதனால்தான் ஒருநாள் அவன் அவளிடம் சொன்னான்.
"ராதா இந்த உலகத்திலே இருக்கிற மேடு பள்ளங்களை இடிச்சுத் தகர்த்து வெட்டிப் பிளந்து எல்லாத்தையும் சமமாக்கிட்டா எவ்வளவு அற்புதமா இருக்கும்?”
அப்போது ஆற்றில் வெள்ளம் ஓடிக் கொண்டிருந்தது. அதன் இடைவிடாத ஓட்டத்தின் ஒலியும் கவிந்திருந்த இருளும் ராதாவுக்குப் பிரியமானவை. அவற்றில் தோய்ந்தவாறே அவள் பதில் சொன்னாள்.
"கண்ணா... அது பகவானுடைய சிருஷ்டி...”
அவளை எள்ளி நகையாடுவதுபோல் சிரித்தான்.
"பகவான் மனிதனுடைய சிருஷ்டி...”
"இப்படிச் சொன்னாவாள்ளாம் வேலை கிடைக்கணும்னு அநுமாரைச் சுத்திண்டிருக்கா...”
"அவங்களுக்கு லஞ்சம் கொடுக்கப் பணமிருக்காது” அவன் திருப்பி அடித்தான்.
"வாஸ்தவம். நிர்க்கதியா நிக்கறவாளுக்கு ஒரு நம்பிக்கையாகவாவது தெய்வம் இருக்கே...?"
"வெறும் நம்பிக்கையை வச்சுக்கினு நிர்க்கதியாவே நில்லுன்னு சொல்லித்தான் தெய்வம் மனுஷனைப் படைச்சிருக்கானா?"
"அப்போ அந்த நம்பிக்கையைக்கூட அவங்ககிட்ட இருந்து பிடுங்கிக்கச் சொல்றியா?
"ஆமா ராதா... எல்லாத்தையும் பிடுங்கி எறி... நம்மால முடியலேன்னா அதுக்கு நீ வேண்டாம்... நான் வேண்டாம். எல்லாம் தானா நடக்கும். எரிமலையில் சாம்பிராணி போட்டுக்கிட்டே இருக்க முடியாது. அது ஒருநாள் வெடிக்கும். அப்போ அநுமாரும் ரங்கநாதரும் வழிவிட்டு நிப்பாங்க."
"அது எப்போ...?"
"தெரியாது."
"உலகம் ரொம்பப் பெரிசு... எல்லோருக்கும் இங்கே எது நடந்தாலும் பழகிப் போயிடறது. இது ரொம்ப பழைய உலகம்!"
அவன் கேட்டுக்கொண்டே அவள் மோவாயை நிமிர்த்தி அவள்அழகை ரசித்தான்.
"கண்ணா நான் போகணும், டைப்படிச்சுட்டு வர இத்தனை நேரமான்னு அம்மா கேப்பா..".
"பயமா...? என்கிட்டே...?"
"ஒங்கிட்டே எனக்குப் பயம் கெடையாது. ஆனா என்ன கண்டே நீ என்கிட்டே? மூஞ்சியையும் மோவாயையும்,உதட்டையும் தொட்டுத் தொட்டுப் பார்த்ததுண்டு?"
"நீ தூண்டில் போட்டு இழுக்கறே!"
அவள் சட்டென்று அவன் கையை இழுத்து தன் துடிக்கும் மார்பின் மீது வைத்து,," துடிக்கறது பார்! இது தான் உயிர்த்தூண்டில். மத்தது எல்லாம் மேஜிக் லான்டர்ன் . ரெண்டு வருஷத்திலே ரெண்டு வருஷம் எதுக்கு ரெண்டு க்ஷணத்தில் மற ஞ்சுடும்" என்றாள் .
" நல்ல வசனம் தான்.ஆனா நீ உன்கிட்டேயே பயப்படறே!"
"எங்கிட்டேயும் எனக்குப் பயம் கிடையாது. அம்மாவுக்காக... மெய்யாவே அம்மாவுக்காக... அப்பாவுக்காக... சாராயம் விக்கறவளோட ஓடிப்போன சண்டாளனைப் பெத்த பெரியப்பாவோட மனவேதனைக்காக நான் பயப்படறேன்."
அப்போது வடதிசையில் மின்னிற்று.
பள்ளிகொண்டாவின் குன்று முகட்டில் செல்லியம்மன் கோயிலின் பாறைமீது திருவிழாவுக்காக அடித்திருந்த சுண்ணாம்பு வெள்ளை பளீரிட்டு மறைந்ததை அவள் பார்த்தாள்.
அவள் முகத்தில் நிலவிய வேதனையை அவன் பார்த்தான்.
"கண்ணெதிரிலே காலா காலமாகக் கும்பிட்டு வந்த கோயில் இடிஞ்சு விழறதை நீ சகிச்சுப்பே... ஏன்னா உனக்குக் கோயில் வேண்டாம்... தெய்வம் வேண்டாம். ஆனா கும்பிட்டவாளுக்கு மனசு உண்டு. பாத்துண்டு இருக்க முடியாது ஹிருதயம் உண்டு. அது கொதிக்கும்... பத்திண்டு எரியும்."
ராதா உணர்ச்சிவசப் பட்டதைப் பார்த்து கண்ணன் மௌனமானான். அந்த மௌனம் அவளுக்கு ஒரு வரம்பிட்டது. கொடி கொடியாகக் கிளைவிட்டு ஓடிய ஒரு மின்னல் கண்ணைப் பறித்தது.
ஒரு குறு உறுமலில் தொடங்கிய நெடிய இடியொன்று ஸ்வரம் ஸ்வரமாய் உயர்ந்து கோப கர்ஜனையாய் வெடித்தது. ராதா பயந்துபோய் அவன் கையைப் பிடித்துக் கொண்டாள்.
"பயந்துட்டியா...?”அவன் அவள் கரத்தை வலுவாகப் பற்றினான்.
"ம்... ம்... ம்... ம்..."
"என்னதான் ஸ்போர்ட்ஸ் சாம்பியன்னாலும் கராத்தேல ப்ளாக் பெல்ட்னாலும் கடைசியிலே இடி இடிச்சதும் ஐயங்கார் பொண்தான்னு ப்ரூவ் பண்ணிடறே?"
அவன் கையை உதறிவிட்டு, அவனுக்கு வலிக்கிற மாதிரி ராதாஅவன் தொடையில் ஒரு தட்டு தட்டினாள்.
தட்டிய கையைப் பிடித்துக்கொண்டு அவன் சொன்னான்.
"தெய்வம்... கோயில்... எனக்கு எதுவும் வாணாம். எனக்கு நீ வேணும்."
அவள் பதிலளிக்கவில்லை.
வீட்டுக்குப் போகும் அவசரத்தை ஒத்திப் போட்டாள்.
"உன் வீடு... உன் கோயில்... உன் தெய்வம்... உன் குடும்பம் எல்லாமே உன்னைச் சங்கிலிபோட்டுப் பிணைச்சு வச்சிருந்தாலும் ஒரு நாளைக்கு நான் வருவேன் ராதா...! அப்போ நீ என் பின்னாலே வந்துதான் தீருவே."
எத்தனை அபாரமன நம்பிக்கை அது!
அதை எப்படிப் பொய்யாக்கிட்டேன் நான்!
ஆற்றின் அக்கரை தாண்டி ஹைதர்புரமும் வேப்பூரும் தாண்டி குடியாத்தம் ரயில்வே ஸ்டேஷன். இரவுகளில் ஹூங்காரமிட்டுக்கொண்டே இரயில் எஞ்ஜின்கள் போகும் ஓசை கேட்கும். எப்போதாவது விழித்துக்கொண்டு புழக்கடைக்குப் போகும்போது அந்த எஞ்சின் ஓசை பொய்த்துப்போன நம்பிக்கைகளைக் குறித்து எக்காளமிடுவதாக ராதா நினைப்பாள்.
*************************************************************************
"ஒம்ம பையனை அந்த சாராயம் விக்கறவளோட ஸ்டேஷன்லே பார்த்தேன் ஸ்வாமி. ரயில் ஏறிண்டிருந்தான்.!"
அப்பா அவர் சிம்மாசனத்தில் அமர்ந்திருந்தார். இலை தைத்துக் கொண்டிருந்த அம்மா, குத்திய ஈர்க்கை ஒடிக்காமல் உட்கார்ந்துவிட்டாள். கண்களிலிருந்து தாரை தாரையாய் வழிந்தது.
பெரியப்பா நரசிம்மாச்சாரியார் அழுதபடி சேவித்து, கொண்டு வந்த பிரசாத பாத்திரத்தோடு 'ரங்கா... ரங்கா...’ என்று மார்பு வெடிக்கிற குரலில் கூவிவிட்டு உட்கார்ந்துவிட்டார்.
அப்பா சிம்மாசனத்திலிருந்து எழுந்திருக்கவில்லை, அசையவில்லை. சிற்பம் போல் முகம் சமைந்திருந்தது.
அவர்தான் தம்பி, எனினும் அண்ணன் போன்று கம்பீரமாயிருப்பார். நரசிம்மாச்சாரியாரே அவரிடம் சுருக்கமாகத்தான் பேசுவார்.
இரண்டு தலைமுறைகள் அவரிடம் பாடம் படித்தனர். கிருஷ்ணமாச்சாரியாரைப் பார்த்ததும் மரியாதைக்காக எழுந்து எழுந்து நிற்கின்றனர்.
"நாளை எந்த முகத்தோடு சைக்கிளில் பள்ளிக்கூடம் போவீர்கள் அப்பா? பொரியப்பாவுக்குப் பள்ளிகொண்ட பெருமாள் இருக்கிறார். கணக்கு வழக்குகளை அங்கே ஒப்புவித்து விட்டு, கைகட்டி நிற்போருக்குக் கற்பூர ஆரத்தி காட்டி விடுவார்.நீங்கள் எந்த முகத்தோடு பஜாரில் நடமாடுவீர்கள்? காதர்மொகிதீன் இப்போ நீங்கள் போனால் எழுந்து நிற்பாரா அப்பா?”
"ஸ்ரீதரா... ஸ்ரீதரா... நோக்கு யார் மேல கோவம்...? இவாளோட வைதீகத்தின் பேர்லேயா...? இந்த பகவத் ஸ்மரணையின் பேர்லேயா...? இந்தக் குலத்தின் பேர்லேயா...? எதுக்கு சீட்டாடுனே...? குடிச்சே... தெருத் தெருவா அலைஞ்சே...? எதெதற்கோ வஞ்சம் தீர்த்துக்கவா இப்போ சாராயக்காரியோட ஏன் ஹாங்காங்குக்கு ஓடிட்டே...? இது விதியா? அமிர்தத்திலே இருந்துதான் விஷம் பிறக்கணுமா? வெளிச்சத்திலேருந்துதான் இருட்டு பிறக்கணுமா...?
குடியாத்தம் ஸ்டேஷன் வழியாக ஹூங்காரமிட்டு ரயில்கள் ஓடுகின்றன. எஞ்சின்கள் ஊளையிட்டபடி ஓடுகின்றன. அவை ஓய்வதில்லை. ஒன்றிலே ஸ்ரீதரன் போனான். இன்னொன்றில் கண்ணன்... எது இருட்டு? எது வெளிச்சம்?
"கண்ணா நீ என்னை மன்னிப்பாயா? உனக்கும் எனக்கும் மத்தியில் என்ன ஒப்பந்தம் இருந்தது என்று யாருக்குத் தெரியும்?. ஒரு கடிதத்தில் நான் உனக்கு வேர் என்று எழுதியிருந்தாய். வேர் அறுந்து போய்விட்டதா கண்ணா. இப்போது விழுதுகள் உன்னைத் தாங்குகின்றனவா? எந்த விழுதுகள்?
என்னை நீ மன்னிக்க மாட்டாய். மன்னிப்பது எனக்கே ஒரு தண்டனை. மறந்துவிடு... மன்னிக்காதே...! ஸ்ரீதரனை யாரும் மன்னிக்கவில்லை. இந்தக் குடும்பத்திற்கு அந்த ஒரு தண்டனை போதுமே. இவர்கள் பரிதாபத்திற்குரியவர்கள். இவர்கள் செய்த ஒரே தவறு, நம்பிக்கைதான். நீ இவர்கள் நம்புவதைக் குறித்து பரிதாபப்பட்டவன். நான் அந்த நம்பிக்கைகளை மதிக்கிறவள். அவை வீணாகி விரயமாகிவிட்டாலும் அந்தந்த வாழ்க்கைகளிலே ஒரு பொருளாவது மிஞ்சும்.
"என்னை நீ புரிந்துகொள். இவர்கள் இன்னொரு முறை தாங்கிக் கொள்ள மாட்டார்கள். இவர்கள் வைத்திருக்கும் பாசத்திற்கும் பிரியத்திற்கும் அல்ல, இவர்கள் வைத்திருக்கிற நம்பிக்கைக்காக, எங்கே இன்னொன்று நடந்துவிடுமோ என்று அஞ்சி அஞ்சி இவர்கள் நடுங்குவதற்காவது நான் இரக்கப்பட வேண்டும்.
"உனக்கு எப்போதுமே இரக்கம் ஒரு விலங்கு; சகிப்பது போழைத்தனம்; தயக்கம் ஒரு மடமை. ஆனால் எனக்கு அது நியமிக்கப்பட்ட விதி. சூபாரத நாட்டுப் பெண்’ இப்படி ஒரு முத்திரை உண்டு, அது குத்தப்பட்ட முத்திரைதான். எனினும் அவள் ஏற்றாக வேண்டும். உதறி எறிந்து எல்லாவற்றையும் குப்பைக் கூளங்களிலே வீசியெறிந்துவிட்டு, விடுதலை... விடுதலை என்று விடுதலை பெற்ற பெண்ணாகி விடுவது சர்வ சுலபம். ஆனால் நெஞ்சை எதுவோ சாகிற வரை அறுத்துக்கொண்டே இருக்கும்.
"என்னை இப்போ பாத்தியானா உனக்குப் புதிரா இருப்பேன். ஐ ஆம் ராதா... தி அன் நோன்.’ எனக்கே நான் 'அன்நோன்’ ஆகிப்போனேன். ஏன் இந்த காப்டனை கல்யாணம் பண்ணிண்டேன்...? வரதட்சணையே கேக்காததாலேயா...? அப்பா சொன்னதாலேயா...? 'பெருமாள் கண்ணைத் தொறந்துட்டார்’னு சந்தோஷத்தால கண் கலங்க பெரியப்பா வந்து நின்னதாலேயா?
நாற்பத்திரண்டு வயசிலே காப்டனாக என்ன வழியுண்டு என்று யோசித்து யோசித்து, தலை நரைத்த..., தொந்தி விழுந்த..., மிலிட்டரி டிஸிப்ளின்லே உணர்வுகள் எல்லாம் மழுங்கையாகிவிட்ட இந்த மனுஷனை நான் ஏன் கல்யாணம் பண்ணிண்டேன்?
தெரியலே... ஐஸ்ட் இட் ஹாப்பண்ட்...! நீ இல்லே... நீ எப்போதைக்குமே இல்லே!அப்புறம் எனக்கு சாய்ஸ் என்ன வேண்டியிருக்கு?
இவர் நிறையக் குடிக்கிறார். ஆபீஸர் மெஸ்ஸிலே பார்ட்டி நடந்தா... வீட்டிலே ஏதாவது பார்ட்டி வச்சா, என்னையும் குடிக்கச் சொல்றார்... குடிக்கறேன்...! எஸ்... நான் குடிக்கிறேன், எப்பவுமே இல்லே... ஆபீஸர்ஸ் மீட்ல ஒரு பெங்களூர் பார்லே வேலை செய்யற ஒரு ஆங்கிலோ இண்டியன் பொண்ணோட இவருக்கு உறவு உண்டுன்னு எனக்குத் தெரியும். வேற எத்தனையோ உண்டு. எல்லோருக்கும் தெரியும். ஊர்லேயும் தெரியும்.
இவருக்கு சிக்கன்னா ரொம்பப் பிடிக்கும். இப்போ நான் சிக்கன் சமைக்கிறேன். இவருக்காக... ஆனா அந்த ரப்பரை..., ஒரு போன உசிரோட மாமிசத்தை நான் சாப்பிடறதில்லே... 'ரொம்ப நன்னாருக்கு... ரொம்ப நன்னாருக்கு’ன்னு சிலாகிக்கிறார். பள்ளிகொண்டாவுக்குப் போனா இவருக்குப் பெரிய மரியாதை. எனக்கும் ஒரு பெரிய ஆர்மி ஆபீஸர் மனைவி என்ற அந்தஸ்து! இதிலே என்ன வேடிக்கைன்னு உனக்குத் தோணும். இவரும் ஒரு பெருமாள்கோயில் அர்ச்சகரோட பிள்ளை!
இந்த வினோதத்தைத்தான் நான் ரசிக்கிறேன். கண்ணா, ஸ்ரீதரனோட பேசணும்போல இருக்கு...
'ஸ்ரீதரா உன்மீது இப்போ எனக்கு வெறுப்பில்லே... சூஐ பிடி யூ’. நீ ஏன் கலகக்காரனானே? ஒளிவுமறைவில்லா உன் பகிரங்கத் துணிச்சல்லே எவ்வளவு துயரமான ஒரு நேர்மை இருக்கு?'
கண்ணாநீ... 'என்னோடு வந்திடு’ன்னு என்னைக் கூப்பிட வந்தியே... அந்த நாள் உனக்கு ஞாபகம் இருக்கா..? அப்ப கொசஸ்தலை ஆறு முழுக்க வெள்ளம். அதற்கு நடுவிலே ரெண்டுபேர் ஆணும் பெண்ணும் மாட்டிண்டாங்க... நினைவிருக்கா? அப்போ சாயந்திரம்...! வெள்ளம் சுமாராய் இருக்கிறப்பவே கடந்து போயிடலாம்னு போறப்ப... ஆத்துல இறங்கினவங்க, பாதி வழி போறதுக்குள்ளே வெள்ளம் பெருகி வந்துடுத்து, ஒரு புல் நைட்...! ஏன் சாயந்தரம் அஞ்சு மணி வரைக்கும் ஒரு மணல் மேட்டிலே சுத்தியிலும் வெள்ளத்துக்கு மத்தியிலே ஒதுங்கி அவா கத்திக் கத்திக் கூப்பாடு போட்டா... யாருமே காப்பாத்தப் போகலே... வேடிக்கை பார்க்கத்தான் போனா... வேற என்ன பண்ணனும்னு யாருக்கும் தோணவே இல்லே... ஒருவகையில் நீயும் நானும் அப்படித்தான் ஒரு வெள்ளத்துக்கு மத்தியில மாட்டிண்டோம். அவாளைக் காப்பாத்திக் கரைசேர்க்க தீயணைக்கிற படை வந்து 'லைப்’ போட்விட்டுக் காப்பாத்துச்சு.
ஆனா நம்மை யாரும் காப்பாத்த முன்வரல்லே...! நான் ஒரு திக்கு ... நீ ஒரு திக்கு... வெள்ளம் வாரி இழுத்துண்டு போயிடுத்து...! பள்ளிகொண்டாவுக்கு எதைப் பத்தியும் கவலை இல்லே,
அது அப்படியேதான் இருக்கு...! இந்த தேசம் போல![தொடரும்]
No comments:
Post a Comment