Tuesday, 27 June 2017

தீக்குளிக்காத விட்டில்கள் 2

[மறந்து விடவில்லை நண்பர்களே, தொடர்ந்து கொண்டிருக்கிறேன்]

தீக்குளிக்காத விட்டில்கள் 2
ஆனால்  ராதாவிடமிருந்து செல்போன் அழைப்பே வரவில்லைவீட்டுக்கு விலக்காகி விட்டதால் அவளை மட்டும் தனியே  விட்டுவிட்டு அதிகாலையில் உத்தர ரங்கநாத ஸ்வாமி கோயிலில் நடந்த தூரத்து உறவினர் திருமணத்துக்கு எல்லோரும் போய்விட்டிருந்தனர்.
குளித்து முழுகிய கூந்தலின்மீது கட்டியிருந்த டவலிலிருந்து சொட்டுச் சொட்டாக முதுகில் நீர்த்துளிகள் சிதற, ராதா ஒரு மூலையில் அமர்ந்து ஒரு அப்ளிகேஷன் பூர்த்திசெய்து கொண்டிருந்தாள். அதை முடித்து சார்ப்பு மேஜையை  டர்ரென்று  ஓசை எழ  அகற்றி  எழும்போது  தான்  கண்ணன் படியேறி வந்தான்.
வாசலுக்கு நேராகத்தான் கதவைத் திறந்து போட்டுவிட்டு  ராதா  விண்ணப்பம் எழுதிக்கொண்டிருந்தாள் . அவனைக் கண்டதும்  கதவைச் சாத்தப்போன அவள் கை நின்றுவிட்டது. கதவுக்கைப்பிடியின் லொட்டென்ற ஓசை ஆட்சேபித்து என்னமோ சொல்லிற்று.
"பெரிய ஹீரோங்கற நெனப்போ?” என்று  தைரியமாக  வீடேறி வரும் அவன் துணிச்சலை  மெச்சிக்கொண்டே எழுந்து நின்றாள். முகத்தில் வியப்பும் கோபமும் கலந்த ஒரு கொஞ்சல்.
கண்ணன் உள்ளே வரவில்லை
வெளி நடையிலேயே நின்றான். பார்த்தான்
அந்தப் பார்வையே உணர்த்தியது. கண்ணன் ஒரு தீர்மானத்தோடு வந்திருக்கிறான் என்று.
ராதா உதட்டை மடித்துக் கடித்தபடி  கண்ணை இடுக்கிக்கொண்டு  அவனிடம் உள்ள மாற்றத்தை உணர்ந்தாள்.
அவளையும் அந்த உதட்டுமடிப்புக்கடிப்பின் ஒய்யாரத்தையும்  ஆழ்ந்து பார்த்துவிட்டு கண்ணன் புன்னகை செய்தான்.
"இது வெள்ளோட்டம் மட்டுமே...” என்றான்.
அவன் சொல்ல வேண்டியதை எல்லாம் சொல்லி முடித்து விட்டதுபோல் ராதா உணர்ந்தாள்.
அவள் நிற்பதை அவன் ரசித்துக்கொண்டே எதற்கும் துணிந்த தொனியில் சொன்னான்.
"புறப்படு...”
ராதா எங்கே என்று கேட்கவில்லை. கால்ஷியம் ஊசி ரத்தநாளத்தில் கலக்கின்ற விறுவிறுப்பான - இம்சையான - ஆனந்த அனுபவம். ஒரு ஜயண்ட் வீல்ஸ் ஆகாய சஞ்சாரம் போன்ற நரம்புகள் ஜில்லிட்ட அதிர்ச்சி.
எங்கே?
ராதாவுக்குத் தெரியும்.
'எங்கே கட்டற்ற சுதந்திரமோ அங்கே...!
எங்கே பந்தங்கள் என்ற சிறைக்குள் பலி வேண்டாமோ அங்கே...!
எனினும்... எனினும்... அதற்கு நான் தயாராக இல்லையே. திடீரென்று இப்படி ஒரு உத்தரவு போட்டால்... கொஞ்சம் அவகாசம்...'
ராதா "எப்போதுஎன்று கேட்டாள்.
கண்ணன்"இப்போ...” என்றான்.
எல்லாம் முடிந்து  உள்ளத்தின் தீர்மானம் வெடிக்கும் நேரம் வந்தால், ஒரு கணமும் தாமதிக்காதவன். வைத்த காலை பின்னுக்கு எடுக்காதவன். ராதா திணறினாள்.
"கொஞ்சம் பொறு கண்ணன்...”
கண்கள் தீர்க்கமாக மின்னின. அவளது விழிகளிலேயே மூழ்கி, அவளது மன ஆழத்துக்குப் போனான். அவளைப் பின்னிப் பிணைந்த பந்தங்கள் என்ற கொடிகளையும் வேர்களையும் வெட்டியெறிபவன்போல் கூர்மையாக அவளைப் பார்த்தான்.
"எதுவரைஎன்று கேட்டான்.
"ராத்திரி வரை..."
"இந்த வழியா குடியாத்தத்திற்கு பஸ் போகாது. சுத்திக்கினுதான் பஸ் போகும். பன்னெண்டு மணிக்கு காட்பாடியில் ரயில்."
"பத்து மணிக்கு ஒரு சைக்கிள் எடுத்து வரட்டுமா?"
"இரு... இரு... கண்ணன். அவசரப்படாதே....! இன்னும் நான் தயாராகணும்."
அவளையே பார்த்தான்.
"எல்லா யோசனைகளும் நிதானங்களும் இழந்துவிடத் துணிகின்ற சமாதானங்கள்தான்என்றான்.
"...ம் ம்...சரி பனிரெண்டு மணிக்கு வா...” என்று சொன்னாள்.
அந்த பதிலில் தெளிவில்லை.
அன்று இரவு பனிரெண்டு மணிக்கு காட்பாடி வழியாக சென்னைக்கு ஒரு ரயில் போயிற்று
அதிலே ராதா போகவில்லை
கண்ணன் மட்டும் போனான்.

அது நடந்து வெகு நாட்களாயின
ள்ளிகொண்டாவில் தாம்போகியில் ஒரு  வெள்ளம் வந்தது.வடிந்தது. பின்னால் ஆறும் வற்றியது. தான் ஏன் அவனோடு போகவில்லை என்று ராதா ஒவ்வொரு விதமாக சமாதானம் சொல்லிக் கொண்டாள். எல்லா சமாதானங்களும் மூடமூட அறுந்து விழும் திரைகளாயின. அவளது துணிவின்மை, அணைகளை உடைத்து வரும் வெள்ளம் போன்று பாய்ந்து வந்த கண்ணனின் உணர்வுகளுக்கு அவள் அருகதையற்றுப் போனாள்
அந்த சமாதானங்கள் மீண்டும் மீண்டும் அதையே  சுட்டிக்காட்டின.[தொடரும்]

No comments:

Post a Comment