Friday 28 July 2017

தீக்குளிக்காத விட்டில்கள்.14

தீக்குளிக்காத விட்டில்கள்.14
[இந்தப்பதிவுடன் தீக்குளிக்காத விட்டில்கள் நாவல் முற்றுப்பெறுகிறது]
கே.ஆர்.எஸ். வண்டி திரும்பி செல்வாம்பாள் பார்க்கை நெருங்கும்போது அவர்கள் இருவரும் இறங்கிக் கொண்டார்கள்.
"இங்கேயே ஆட்டோ கிடைக்கும் இல்லேன்னா அநாவசியமா பஸ் ஸ்டாண்ட வரைக்கும் போய் ஆட்டோ பிடிச்சிட்டு வரணும். நிச்சயமா 14ஆம் நம்பர் பஸ் கிடைக்காதுஎன்று கண்ணன்தான் யோசனை கூறினான்.
அவர்கள் இருவரையும் இறக்கிய பஸ் புறப்பட்டுப் போய்விட்டது. அருகில் எங்கும் ஆட்டோ வருவதாகத் தெரியவில்லை.
"மணி என்ன ஆகியிருக்கும்...?” என்று கேட்டாள் ராதா.
"மணி ஒன்பதரை இருக்கும்...” என்று பதிலளித்தான் கண்ணன்.
"பத்து மணிக்குள்ளே ஹாஸ்டலுக்குப் போயிடுவோம் இல்லே...?”
"தாராளமாய்ப் போயிடலாம். ஏன் வாட்ச்மேன் கதவைப் பூட்டிடுவானோ...?”
"எல்லோரும் ஊருக்குப் போயிண்டிருப்பாங்க. அதனாலே இன்னிக்கு ஒன்னும் அவ்வளவு கட்டுப்பாடு இருக்காது. ஆனாலும் பத்து மணிக்குள்ளே போயிடனும்.”
அவர்கள் ஜன நடமாட்டம் குறைந்த அந்தச் சாலையின் வழியாகச் சற்று வேகமாக நடந்தார்கள்.
"கங்கோத்ரி கேட் வழியாக யூனிவர்சிட்டி காண்டீனை கட் பண்ணிட்டுப் போயிடுவோம்...”
"சரி...”
அவர்கள் ஹாஸ்டலுக்குப் போவதையே குறிக்கோளாகக் கொண்டவர்கள்போல வேகமாக நடந்து வந்தார்கள். கங்கோத்ரி கேட்டினுள் பிரவேசித்து இன்ஸ்டிடியூட் ஆப் கரெஸ்பாண்டென்ட் கோர்ஸ் வழியாக நடந்தபோது, நிலா வானத்தில் பளிச்சென்று பிரகாசித்தது.
விழுதுகள் அடர்ந்த அந்த ஆலமரத்தருகே வந்ததும் ராதா சற்று நின்றாள்.
"ஏன் ராதா...?” என்று கேட்டான் கண்ணன்.
"இந்த நிலா நம்ம பள்ளிகொண்டா ஆற்றிலே ஒரு சமயம் பிரகாசிக்கறப்போ நாம தனியா பேசிக்கிட்டிருந்தோமே, அது உனக்கு நினைவிருக்கா...?”
"இருக்கு...”
ஜன நடமாட்டமேயில்லாத அந்தச் சாலையில் ஆலமரத்தின் இலைகள் மெதுவாகச் சரசரப்பதைத் தவிர வேறு ஒலிகளற்ற அந்தச் சூழ்நிலையில், அவள் தன் வசமிழந்ததுபோல் தென்பட்டாள்.
"கண்ணன்...” என்று உணர்ச்சிவசப்பட்டவளாய் ஓரடி முன்னே வைத்து அவன் மார்பிலே முகத்தைப் புதைத்து அந்த மார்பில்  அவளுக்குரிய எதையோ தேடித் துழாவுவதுபோல் முகத்தை இடமும் வலமுமாகத் தேய்த்துக் கொண்டே விம்மியழத் தொடங்கினாள்.
கண்ணீரின் சூடும் அவளது உதடுகளின் ஈரமும் ஒருங்கே பட்டு அவன் உடல் சிலிர்த்தது.
"ராதா... என்ன இது...?”
"கண்ணன்.... ............அவள் வாய்விட்டுக் கத்திவிட்டாள்.
கண்ணன், அந்தக் குரலின் முறையீட்டில் தாக்குண்டு போய் ஓர் அனிச்சை செயல்போல் அவள் முதுகைத் தன் கரங்களால் சிறையிட்டுத் தன் மார்பினோடு இறுக ஐக்கியப்படுத்திக் கொண்டான். அவளது ஈரமான கண் இமைகளும் கன்னங்களும் அவன் முகத்திலே புதைந்து துடித்து நகர்ந்தன.
ராதாவின் உதடுகள் அவன் உதட்டைச் சந்தித்தபோது கண்ணன் தணித்துத் தணித்தும் அவற்றின் தணியாத தாகத்தை உணர்ந்தான்.
"போதும்... ராதா... நம்மை நாமே நாசமாக்கிக்க வேண்டாம்...”
"நான் நாசமாகணும்... இதுவரையிலும் நான் நாசமாகல்லே... இப்போ நான் நாசமாகியே தீரணும்...”
ராதாவின் உதடுகள் கண்ணனின் கழுத்திலும் தோளிலும் மோவாயிலும் கன்னங்களிலும் உதடுகளிலும் அவளை நாசமாக்க வேண்டிய அக்னியைத் தேடுவதுபோல் சஞ்சரித்தன.
கண்ணன் கற்சிலைபோல் எந்த உணர்ச்சி அபவாதங்களுக்கும் இடமற்ற மரக்கட்டைப்போல் வெறுமையாய் நின்றான்.
"கண்ணன்...” அவள் குரல் கேவிற்று.
"ராதா... ப்ளீஸ்... ப்ளீஸ்... பீ சென்சிபிள்...”
" டோண்ட் வாண்ட் எனி சென்ஸ்...” அவள் உருகி வழிந்து கொண்டிருந்தாள்.
"பட்... வாண்ட்.. நீட்  சென்ஸ்என்று சீறுகின்ற குரலில் கண்ணன் சொன்னான்.
கண்ணனின் முதுகின்மீது கொடிபோல் படர்ந்திருந்த அவளது கைகள் விலகின.
"ராதா நாசமாயிடறது ரொம்ப சுலபம். நாசமாக்கிடறதும் என் நிலைமையில் இருக்கிற ஒரு ஆம்பிளைக்கு ரொம்ப ரொம்ப சுலபம்...ஜஸ்ட் ஒன் மினிட்...! அதுபோம் நாம நாசமாயிட...”
......................
"ஆனா... இதுலே ஒரு புன்மை தெரியுதே, அது உனக்குப் புரியலே...? ராதா, நீ டிசிப்ளின் கிருஷ்ணமாச்சாரி மகள். வைதீகமான கிருஷ்ணமாச்சாரியார் மகள். அந்தப் பரிதாபமான காப்டன் ஹயக்ரீவனுக்கு மனைவி. நோ... நோ... நோ... எனக்குச் சொந்தமாக்கி இருக்கவேண்டிய சொத்தை எங்கிருந்தோ திருடித்தான் எடுக்கணுமா? எடுக்கணும்னா அது எவ்வளவு கேவலம்? நோ... நோ...”
நிலா மௌனமாகக் காய்ந்தது. ஆலமரத்தின் இலைகளினூடே காற்றின் பெருமூச்சு தெளிவாகக் கேட்டது.
"மனக்கட்டுப்பாட்டை அந்த சொற்ப கால நக்சல் வாழ்க்கையில் நான் கத்துக்கிட்டேன். ராதா! நீ என்ன வேணும்னாலும் பண்ணு.யாரா வேணும்னாலும் இரு. சந்தர்ப்பம் கிடைச்சா சேத்திலே விழற பன்றி ஆயிடாதே. எரிகிற தீயிலே விழுந்து  கருகிற பூச்சி ஆயிடாதே. இதைத்தான் அந்த  சொற்பகால வாழ்க்கையிலே நான் கத்துக்கிட்டேன்."
 ராதா கன்னத்தில் பளார் என்று ஓர் அறை விழுந்ததுபோல ஸ்தம்பித்து நின்றாள். அந்த ஒரு கணத்தில் அவன் எட்டமுடியாத சிகரத்திற்கு உயர்ந்து விட்டதைப் போலவும், தான் ஓர் உயரத்திலிருந்து வீழ்ந்து குன்றிக் குறுகிப் புழுவாகச் சிலிர்த்து நெளிவதைப் போலவும் ஒரு  வித்தியாசத்தை உணர்ந்தாள்.
தூரத்தில் எங்கோ ரோந்து சுற்றும் கூர்க்கா விசில் ஊதும் ஓசை கேட்டது. அந்த எச்சரிக்கையில் அவளுக்கு ஏதோ செய்தி இருந்தது.
'ராதா... ராதா... நீ என்றும் ஒரு பாத்திரம், என்றென்றும் .. பாத்திரமாக மட்டுமே இருக்க வேண்டியவள். ஒன்றைத் தேர்ந்தெடுத்து விட்டு இன்னொன்றிற்கு மாறாதே...!'
அவர்கள் இருவரும் அந்தச் சாலையில் அசைவின்றி நின்றனர்.
எதிரில் ஒரு   சிமெண்ட் பெஞ்ச் தெரிந்தது.
" அங்கே உட்கார்ந்து பேசுவோமா?" கண்ணன் கேட்டான்.
அவள் பேசாமல்  சிமெண்ட் பெஞ்சை நோக்கி நடந்தாள். அவள் பக்கத்தில் நிறைய இடம் விட்டுத் தள்ளி கண்ணன் உட்கார்ந்தான்.
நிலா வெளிச்சத்தில் அவள் முகம் சுருங்கித் துடிப்பதை யோசனையோடு பார்த்துக்கொண்டே, கனமான உணர்ச்சிகள் தாக்கிய குரலில் கண்ணன் சொன்னான்.
" நான் கூப்பிட்டப்போ நீ   என்னோட வராமே போனது என் வாழ்க்கை வேற எதுக்கோன்னு  நினைக்க வைச்சது. அதைத் தேடி எங்கெங்கேயோ சுத்தி ஒரே ஒரு சின்ன விஷயம் தான் கத்துக்கிட்டேன். இரையாகிறவன், உருவாக முடியாது. உருவாக்கவும் முடியாது. முக்கியமான பலம்  ஒண்ணு அவன்கிட்டேயிருந்து போயிடுது. ஆத்ம பலம்."
ராதா கற்சிலை போல் உட்கார்ந்திருந்தாள். எங்கோ தூரத்தில் பார்த்தபடி.
" ஜஸ்ட் நாம்ப என்ன உருவாக்கறோமோ இலையோ, நம்மைப் பாழாக்கிக்க வேண்டாம். இல்லை.. எனக்கு நீ தான் வேணும். உன்னைத்தவிர வேற எதுவும் வேணாம்னு நினைக்கிறியா? சொல்லு.இப்போகூட மூணு வருஷத்துக்கு முன்னாடி பள்ளிகொண்டாவிலே உங்கிட்ட சொன்னதையே நான் திருப்பிச் சொல்றேன். என்கூட புறப்பட நீ தயாரா? அப்படீன்னா சொல்லு, இதோ இந்தப் பெஞ்சி மேலே உட்கார்ந்து, அவ்வளவு பெரிய உடம்பிலே ஒரு சின்ன மனசை வச்சுக்கிட்டு, ‘என் ராதா ஒருத்திதான் எனக்கிருக்கிற ஒரே ஆதரவுன்னு  அந்தக் காப்டன் சொன்னாரே, அதையும் தூக்கியெறிந்து போட்டுவிட்டு உன்னை அழச்சிக்கிட்டுப் போறேன். நீ வரத் தயாரா ராதா...?” நிலவிலே தீர்க்கமாக ஜொலிக்கின்ற முகத்தோடு கேட்டான் கண்ணன்.
ராதா ஒரு பதிலுமின்றி உட்கார்ந்திருந்தாள் .
"இப்பவே சொல்லணும்கூட இல்லே... நாளைக்குக் காலையிலே சொல்லு. எதைச் செய்தாலும் தெரிஞ்சி பூரணமா அதற்குச் சம்மதித்து சுத்தமா பிசிறு இல்லாம அறுத்திட்டுச் செய்யணும். அப்புறமா அதைப் பத்தி வருத்தப்படவே கூடாது. யாரையோ ஏமாத்திட்டு ஒரு பொய் வேஷம் போட்டுக்கக்கூடாது. அப்புறமா நாமே நமக்கு ரொம்ப ஃபில்தியா ..சாக்கடையாப் போயிடுவோம்.”
ராதாவுக்கு ஆர்டலியையும், மிஸஸ் மல்ஹோத்ராவையும் இணைத்து ஷில்லாங்கிலே பேசப்பட்ட கதைகள் நினைவுக்கு வந்தன. அதைக் கேட்டபோத தன் உடம்பிலே ஏற்பட்ட அருவருப்பு நினைவு வந்தது.
அடுத்த நாள் மைசூர் பஸ் ஸ்டாண்டில் மாலை ஏழரை மணிக்குப் புறப்படும் சென்னை பஸ் நின்று கொண்டிருந்தது. பஸ்ஸுக்குப் பின்புறம் இருந்த டிக்கியில் ராதாவின் பெட்டியை வைத்துவிட்டு கண்டக்டரிடம் வந்தான் கண்ணன்.
"இவங்க பள்ளிகொண்டாவிலே இறங்குவாங்க. அப்போ இந்தப் பெட்டியைக் கொஞ்சம் எடுத்துக் கொடுத்திடுங்கஎன்று வினயமாகச் சொன்னன் கண்ணன்.
"பள்ளிகொண்டாவில் ஸ்டாப்பிங்கே இல்லே...பேசஞ்சருங்கிட்ட இதே பெரிய தகராறு... அவசரத்துக்கு வந்து ஏறிடுவாங்க. நம்ம சந்தர்ப்பத்திற்கு ஏதாவது பண்ணிட்டம்னா டிக்ஷனரியைப் பக்கத்துலே வச்சிட்டுப் பெட்டிஷனை எழுத உட்கார்ந்துடுவாங்கஎன்று அலுத்துக் கொண்டே சொன்னார் அந்த கண்டக்டர்.
கண்ணனுக்குச் சிரிப்பு வந்துவிட்டது.
"நீங்க எங்கே நிறுத்தினாலும் ஒரு பஸ் கனெக்ஷன் கிடைக்கறாப்பிலே நிறுத்துங்க  கவலைப்படாதீங்க. இந்த அம்மா பெட்டிஷன்லாம் எழுத மாட்டாங்கஎன்று அவருக்குத் தைரியம் ஊட்டி விட்டு ராதாவை பஸ்ஸில் ஏறச் சொன்னான்.
"பஸ் புறப்பட இன்னும் நேரமிருக்குஎன்று ராதா வெளியில் வந்து  நின்றாள்.
"அப்புறம்...”
"அப்புறமா... என்ன இருக்கு? நான் பள்ளிகொண்டாவிற்குப் போய்ட்டு ஒரு கால் கொடுப்பேன். அவர் ஷில்லாங்கிலிருந்து வந்து கூட்டிண்டு போவார்.”
கண்ணன் அவளைப் பார்த்து புன்முறுவல் செய்தான்.
'அந்தப் புன்முறுவல் எவ்வளவு ஆரோக்கியமாக இருக்கிறதுஎன்று ராதா அதை ரசித்தாள்.
"மறுபடியும் உன்னை பார்க்க முடியுமா கண்ணன்...?”
"ஏன் முடியாது?. போலீஸ் ரெகார்டிலேயிருந்து என் பேரை எடுத்திட்டா நான் பள்ளிகொண்டாவுக்கு வந்து தானே ஆகணும்...”
"அவருக்கு லீவு கிடைச்சி நான் வரும்போது நீ அங்கே இருக்கணும். இது அவ்வளவு சீக்கிரத்தில் நடக்கப் போவுதா...?”
"பார்க்கணுமா  என்ன...? நினைப்பு இருந்தா போதுமே...”
"அதுவும் சரிதான்...”
"படிச்சது போதும்னு தோணுது. படிச்ச வரைக்கும், கத்துக்கிட்ட வரைக்கும் உருப்படியா நாலு குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுத்தா அது நாம் படிக்கறதைவிடத் திருப்தியாய் இருக்கும்.”
டிரைவர் கதவை அறைந்து சாத்திக்கொண்டு பஸ்ஸை ஸ்டார்ட் செய்தார்.
"ஏறுங்க சார்... ஏறுங்க... ஏறுங்க...” கண்டக்டர் கட்டளையிட்டார்.
"விஷ் யூ பெஸ்ட் ஆப் ஆல்...”
"தாங்க் யூ...! விஷ் யூ ஸேம்...”
ராதா பஸ்ஸிற்குள் ஏறி உட்கார்ந்தாள்.
(முற்றும்)


தீக்குளிக்காத விட்டில்கள்: 13

தீக்குளிக்காத விட்டில்கள்: 13
பரீட்சைகள் ஒவ்வொன்றாகக் கழிந்துகொண்டே வந்தன. மைசூரில் தனது நாள்கள் விரல்விட்டு எண்ணுமளவு குறைந்துகொண்டே வருவதை ஒரு கலக்கத்தோடு ராதா உணர்ந்தாள். தூரத்தில் ஷில்லாங்..., மலைக் குளிர்..., விழித்திருக்க வேண்டிய இரவுகள்..., மந்தமான பகல்கள்..., சிக்கனும் விஸ்கியும், பெரேடும் பிரமோஷனும், ஆபீசர்களும் பார்ட்டிகளும்..., மிஸஸ் மல்ஹோத்ராக்களும், ஷியாம் சிங்குகளும்.
கடைசி பரிட்சை முடிந்தது. ஆட்டோ ரிக்ஷாக்கள் ஹாஸ்டல் சாலையில் பெட்டி படுக்கைகளோடு மைசூர் பஸ் ஸ்டாண்டையும், ரயில்வே ஸ்டேஷனையும் நோக்கிப் பறந்து கொண்டிருந்தன.
இனி எண்ணுவதற்கு நாள்கள் கூட இல்லை..., மணிகள்தான். இன்னும் எத்தனை மணி நேரம் இந்த மைசூர் வாழ்க்கை?
டாக்டர் ராமாராவிடம் பேசவேண்டும் என்று ஹாஸ்டவில் ரத்னாவுடம் சொல்லிவிட்டு வெளியே வந்தாள் ராதா. பெல்டோபோராம் அவென்யூ வழியாக பார்பர் ஷாப்பின் அருகில் கண்ணன் வந்து கொண்டிருந்தான். அவனைப் பார்த்ததும் தனக்குள் அவள் அடக்கி வைத்திருந்த உணர்ச்சிகள் குமுறிக்கொண்டு எழுந்தன. கண்ணனை நோக்கி அவள் வேகமாக நடந்து சென்றாள். அவளுடைய நடையில் வேகத்தைக் கண்டு ஏதோ நடந்துவிட்டதைப்போல் திடுக்கிட்டு அவன் நின்றான்.
“கண்ணன் உங்கிட்டே கொஞ்சம் பேசணும்.”
அவன் அமைதியாக நின்றான்.
‘தண்டனை போதும். இனிமேல் என்னால் தாங்க முடியாது. உன்கூட நான் பேசியே ஆகணும்என்று பதட்டத்தோடு அவள் சொன்னாள்.
அவள் முகத்தில் தான் தோற்றுவிட்டதை ஒப்புக்கொள்வதுபோல், கடைசியில் நான் ஒரு பெண்தான் என்று கெஞ்சுவதுபோல்
உணர்ச்சிகள் தெறித்தன. அவள் முகம் சிவந்து குழம்பியிருந்தது.
கண்ணன் அந்த உணர்வுகளை எதிர்பாரதவன்போல் விதிர் விதிர்த்து நின்றான்.
“ஓ யெஸ்...  பேசுவோம்.”
“இங்கில்லே கண்ணன். நடுரோட்டிலே இல்லே. வேறு எங்கேயாவது போய்ப் பேசுவோம்.”
“எங்கே போறது?”
“எங்கேயாவது போவோம்சாலையில் அவர்களைக் கடந்து செல்ல முயன்ற ஒரு ஆட்டோவை அவள் கைகாட்டி நிறுத்தினாள்.
கண்ணன் தயங்கினான்.
“ப்ளீஸ்... டோண்ட் கிரியேட் சீன். வந்து உட்கார்.”
கண்ணன் அவளது உணர்ச்சி வசப்பட்ட குரலுக்குத் தன்னையறியாமல் கீழ்ப்படிந்தான்.
“எல்லி ஹோக்திரி?” கன்னடத்தில் கேட்டான் ஆட்டோ டிரைவர்.
“பஸ் ஸ்டாண்ட்என்று சொல்லிக்கொண்டு தன் கையில் வைத்திருந்த வானிட்டி பேக்கைத் திறந்து அதில் எவ்வளவு பணம் இருக்கிறது என்று ஒரு நோட்டம் விட்டாள் ராதா. ஒரு சில்க் ஸாரி வாங்குவதற்காக டாக்டர் ராமாராவிடமிருந்து கைம்மாறாக வாங்கியிருந்த ரூபாயை திருப்பிக் கொடுப்பதற்காக அவள் வைத்திருந்த மூன்று ஆயிரம் ரூபாய் நோட்டுக்களும் சில சில்லரை நோட்டுக்களும் தெரிந்தன. அவள் வானிடி பாக்கை    மூடினாள்.
“கே. ஆர். எஸ் பிருந்தாவன்..., கே. ஆர். எஸ் பிருந்தாவன்என்று பிரைவேட் பஸ் கண்டக்டர் ஒருவன் கூவினான்.
“கண்ணன் பிருந்தாவனுக்குப் போவோமா?” என்று ஆட்டோவிலிருந்து இறங்கியதும் கேட்டாள் ராதா.
கண்ணன் அவளை அலசுவதுபோல் தீர்க்கமாகப் பார்த்தான்.
“நீ ஏதோ பேசணும்னு சொன்னே. நடுரோட்ல வேணாம், அப்படீன்னு மைசூருக்கு வந்தாச்சு. பேசவேண்டியதை இங்கே பேசினாலும் போதுமே.”
ராதாவுக்கு அவனது பேச்சு முகத்திலறைந்ததுபோல் இருந்தது. இன்னும் நீ என்னைத் தனியே நிற்க வைத்தும் புண்படுத்தப் பார்க்கறயா? செய் கண்ணன். ஆனால் நீ என்ன புண்படுத்தினாலும் இனிமேல் நான் புதுசா புண்பட்டுப் போறதில்லை என்ற பாவனையில், கலங்குகின்ற கண்களோடு அவனைப் பார்த்தாள் ராதா.
“ஏன் இப்படி என்னைப் பாடு படுத்தறே கண்ணன்?”
“ராதா நாம பிருந்தாவனம் தானே போகணும்? சரி வா.. நடஅவர்கள் இருவரும் பிருந்தாவனம் பஸ்ஸில் ஏறினார்கள்.
பிருந்தாவனத்தில் அன்று நல்ல கூட்டம். மனிதர்களின் உல்லாசங்களும், களிப்பும் பட்டாம்பூச்சிகள் போல பறப்பதாகத் தென்பட்டது. மலர்களும் மரங்களும், நீரூற்றுக்களும் வண்ண ஒளியும் நெகிழ்ந்தன. பிணிப்புகள் ஒரு கணநேரம் தங்கள் இருட்குகைகளுக்குப் பின் வாங்கின. வியாபாரிகளும், போட்டோ பிடிப்பவர்களும், நெகிழ்ந்து பலவீனமாக்கிக் கொண்டிருந்த  மனிதர்களை மொய்த்தார்கள். கட்டுப்படுத்தப்பட்டிருந் வேட்கைகள் அங்கே கிளர்ந்தெழுந்தன. வயதானவர்களுக்கு வாலிப நினைவுகள் மீண்டும் வந்தன. யௌவனம் அங்கே காற்றாக வீசியது. மலர்களாக முகிழ்ந்திருந்தது. நீரூற்றுகளாகத் தெறித்தது.
“கண்ணன்...! திடீர்னு கூப்பிட்ட அன்னிக்கி ஒரு வாரத்துக்கு முன்னால்தான் ஸ்ரீதர் அந்த சாராயம் விக்கிறவளோடே போயிட்டான். உனக்குத்தான் அது தெரியுமே. அந்த வீடு அப்போ எவ்வளவு துடிச்சிக்கிட்டிருந்ததுன்னு உன்னால ஊகிக்க முடியுமா?”
ராதா புல்தரையில் தன் எதிரே உட்கார்ந்திருந்த கண்ணனைப் பார்த்துக் கேட்டாள். அவன் தலை குனிந்திருந்தான்.
“உனக்கு நீ நினைச்சது உடனடியாக நடந்தாகணும் இல்லே... அப்படித் தானே?”
கண்ணன் பேசவில்லை.
“அன்னிக்கி நான் உன்னோடு புறப்பட்டு வந்திருந்தால், எவ்வளவு நல்லா இருந்திருக்கும்னு இன்னிக்கி நினைக்கிறேன். ஆனால் அன்னிக்கி அதைச் செய்யற அளவு ஒரு பலம் எனக்கில்லை. ஏதோ பிணம் விழுந்த வீடு மாதிரி ஒரு வாரத்திற்கு மேலே எங்க வீடு நிசப்தமாக இருந்தது. சிரிச்சுப் பேசறவா யாரும் சிரிச்சுப் பேசலே. அழவேண்டியா யாரும் அழுதுகூட அந்தத் துக்கத்தைத் தீர்த்துக்கல. இதையெல்லாம் உதறிவிட்டு வந்துடணும்னு மனசு துடித்தாலும், அவாளுடைய மனசை வேறு மாதிரி மிதிச்சிட்டு ஓடிவர்ற தெம்பு எனக்கில்லைராதா சட்டென்று நிறுத்திப் பின்னர் கேட்டாள்.
“நீ ஏன் பொறுத்திருக்கல்லே கண்ணன். நீ ஏன் புறப்பட்டுப் போனே?”
கண்ணன் தலைநிமிர்ந்து அவளைப் பார்த்தான்.
“இப்போ எதுக்கு அந்தப் பழங்கணக்கைப் புரட்டணும்? அதைத் தெரிஞ்சிக்கிட்டு என்ன நடக்கப் போவுது?”
ராதா அவனை ஓர் அம்பு தைத்த மான்போல் பார்த்தாள்.
“ராதா உன்னை நான் தண்டிக்கறதாகவும், உன் மனசை நான் புண்படுத்தறதாகவும் நீயா கற்பனை செஞ்சிக்கிறே. ஆனால், நாம் விரும்பினால்கூட ஒருவரையொருவர் நாம் தண்டிக்க முடியாது.’
“அப்போ நீ ஏன் என்னோட காலேஜிலே பார்த்துப் பேசவேயில்லை.”
“எதுக்குப் பேசணும்...? எதையாவது புதுசா ஆரம்பிக்கவா? உன்னுடைய  வாழ்க்கையிலே குறுக்கிட்டு, நீ போய்க்கிட்டிருக்கிற ஒரு பாதையிலே ஏதாவது பிரச்சனைகளை ஏற்படுத்தவா? நீ அங்கே படிக்க வந்திருக்கிறே. நானும் எதிர்பாராத விதமாக அங்கே படிக்க வந்திருந்தேன். பாதையிலிருந்து திசை மாறி எவ்வளவோ நாளாச்சு. நோக்கம் வேறயாப் போச்சு. நிலைமையும் வேறயாப் போச்சு. நான் என்ன பண்ணட்டும்? மறுபடியும் ஏன் ஒரு பழங்கணக்கைப் புரட்டணும்.”
“அப்போ எங்கிட்டே நீ எதையுமே வெளிப்படையாகச் சொல்லப் போவதில்லையா? அவள் உதடுகள் துடித்தன. புருவங்கள் துடித்தன. கண் இமைகளில் கண்ணீர் துளிர்தது.
“ஆல் ரைட்... இப்போ நான் சொல்றேன் கேட்டுக்கோ. நான் எப்படிப் படிச்சேன். எனக்கு என்ன சொத்து இருந்தது. உனக்கு நல்லாத் தெரியும். எங்க வீட்டில் சொத்துன்னு மிச்சம் இருந்தது ஒரே ஒரு பசுமாடு. அது ஒரு நாளைக்கு இரண்டுபடி பால் கறந்துக்கிட்டிருந்தது. எங்க அப்பா ஒரு  விவசாயக் கூலியாய் அன்றாடம் காய்ச்சியாய் கஷ்டப்பட்டு என்னைப் படிக்க வச்சார். நான் பி. எல். படிக்கப் போறேன்னு ஒரேபிடியாய் நின்னப்போ எங்க அம்மா அந்த மாட்டை வித்து அன்னக்கி சாந்திரம்தான் தொள்ளாயிரம் ரூபாய் காசைக் கொண்டுவந்து கொடுத்தாங்க. அன்னைக்கி நீ வருவேன்னு பதினொன்றரை மணிவரை நான் சைக்கிளோடு காத்திருந்தேன். நீ வரல்லை. நீ வரமாட்டேன்னு எனக்குத் தோணிடிச்சி. வீட்டிலிருந்த ஒரே சொத்தையும் வித்துப்  பெரிய நம்பிக்கையில் என் கையிலே அம்மா காசைக் குடுத்துட்டாங்க. இனி நான் அங்கே தங்கினா அதற்கு அர்த்தமில்லே. அந்த மாட்டை அம்மா அவ்வளவு பிரியமாய், பெரிய நம்பிக்கையோடு வளர்த்தாங்க. உன்னை எது வரவிடாமே தடுத்திச்சோ, அந்த மாதிரி என்னையும் பிறருடைய நம்பிக்கையைக் காப்பாத்தணும்னு ஒன்னு வெளியே துரத்துச்சு.”
“அப்புறம் நீ ஏன் பி.எல். படிக்கல்லே. நீ ஏன் நக்ஸல் ஆனே?”
“ராதா, என்னுடைய நண்பர் ஒருவர் லா காலேஜிலே தேர்ட் இயர் படிச்சிட்டிருந்தார். நான் நேரா அவரைத் தேடிப் போனேன். வக்கீல் தொழில் செய்யணும்னா என்னன்ன விதமான தகுதிகள் இருக்கணும்னு ஒரேநாளிலே எனக்குப் புரிஞ்சு போச்சு, வெறும் பொய்யை முதலாக வச்சு, பொய்யோட விளையாடிக்கிட்டு இந்தச் சீரழிந்துகிட்டுப் போற சமூகத்தோட சமரசம் பண்ணிக்கினாத்தான் சௌகரியமாய் வக்கீல் தொழில் பண்ண முடியும்னு எனக்குப் பளிச்சினு விளங்கிப் போச்சு. என் வேலை வழக்கு மன்றத்திலே இல்லை. இந்தச் சமூகத்துக்கிட்டதான் அப்படின்னு புரிஞ்சு போச்சு, அன்னிக்கி ராத்திரி ஒரு நக்ஸலைட் அந்த நண்பர் வீட்டிலே அடைக்கலம் புக வந்தார். இரண்டு நாள்கள் அவர் அங்கே தங்கியிருந்தார்.மூன்றாவது நாள்அவர் புறப்பட்டபோது நானும் அவர் கூடவே புறப்பட்டு விட்டேன். மீதிதான் உனக்குத் தெரியுமே”.
அவன் வாழ்வில்தான் என்னென்ன விளைவுகளை ஏற்படுத்தி விட்டோம் என்பதை ராதா உணர்ந்தபோது, பெரிய குற்றவாளி போல ஓர் உறுத்தல் அவளுக்கு ஏற்பட்டது.
“நேரமாச்சுஎன்று அவன் எழுந்தான்.
“இப்போதுதான் லைட் போட்டிருக்காங்க. மணி ஏழுதான் ஆகுது. உட்கார் கண்ணன். ஏன் என்னைக் கண்டு மிரண்டு மிரண்டு நீ ஓடறே?” என்று கேட்டாள் ராதா.
கண்ணன் நின்றுகொண்டே பதிலளித்தான்.
“எந்தச் சந்தர்ப்பத்திலும் யாரைக் கண்டும் நான் மிரளமாட்டேன். அது உனக்குத் தெரியுமே
“அப்போ உட்கார்
“இல்லை. எனக்கு இப்போ கட்டாயமா ஒரு காப்பி சாப்பிடணும் போல இருக்கு.”
“அடடே, ஆம் சாரி கண்ணன் காப்பி கூட சாப்பிட வைக்காம உன்னை இழுத்துட்டு வந்துட்டேன்என்று எழுந்தாள் ராதா.
“சரி... நட போவோம்.”
ஒரு திருவிழா உல்லாசம் போல் அவசரம் அவசரமாக இந்த வாழ்க்கை வழங்கிக் கொண்டிருக்கும் இன்பத்தைப் பருகிவிட வேண்டும் என்ற துடிப்போடு சஞ்சரித்த மனிதர்கள் மத்தியிலே அவர்கள் இருவரும் மெதுவாக நடந்து சென்றார்கள்.
கிருஷ்ணராஜ சாகரத்தைப் பார்ப்பதுபோல் கம்பீரமாக நின்றிருந்த அந்த ஆடம்பரமான ஹோட்டலுக்குள் இருவரும் நுழைந்தார்கள்.
“என்ன சாப்பிடறே?” என்று வெயிட்டர் வைத்துவிட்டுப் போன மெனுவைப் புரட்டிப் பார்த்தபடியே கேட்டாள் ராதா.
“எனக்கு ஒன்னும் வேணாம். ஒரு காப்பி மட்டும் போதும். உனக்கு என்ன வேணுமோ ஆர்டர் பண்ணு.”
ராதா அவனை வெறித்துப் பார்த்தாள். அவனை அள்ளித் தழுவி அவனோடு கலந்து முயங்கிக் கரைந்து போய்விட வேண்டும் என்ற தாகம் அவளுக்குள் உந்தியெழுந்தது.
“எனக்கு வேண்டியதை நான் ஆர்டர் பண்ண முடியாதுஅவள் குரலில் நேர்ந்த மாற்றத்தைச் சடக்கென்று புரிந்துகொண்டு அவளைத் திரும்பிப் பார்த்தான் கண்ணன். அவர்கள் அந்த மூலையில் தனியாக உட்கார்ந்திருந்தார்கள்.
“கண்ணன் எனக்கு நீ வேண்டும்...” ராதா மீண்டும் தொடங்கினாள்.
அன்றொரு நாள் பள்ளிகொண்டாவின் ஆற்றங்கரையில் அதே வார்த்தைகளை அவள் உச்சரித்தபோது உண்டான அந்தத் தூரத்து இடிமுழக்கம் ஒரு சங்கேத ஒலிபோல் அவன் மனசில் கேட்டது.
வெயிட்டர் வந்து நின்றான்.
ராதா இரண்டு ஸ்வீட்டுகளுக்கு ஆர்டர் கொடுத்தாள்.
வெயிட்டர் அகன்றான்.
தான் கேட்டதற்கு அவன் இன்னும் பதில் தரவில்லையே என்று கேட்பதுபோல் அவனை அவள் பார்த்தாள்.
“ஸாரி...” என்று பதில் வந்தது.
அவள் தலைகுனிந்தாள்.
ஸ்வீட் வந்தது. அதை முடித்ததும் இரண்டு காரம், பின்னர் காப்பி. வெயிட்டர் டிரேயில் பில்லைக் கொண்டுவந்து வைக்கும் வரையில் அவர்கள் மௌனமாகச் சாப்பிட்டார்கள். பில் வந்தது. அவன் கொடுப்பதற்கு முன்னால் அவள் அதைத் தடுத்துவிட்டு வானிட்டி பாக்கைத் திறந்து ஒரு ஆயிரம் ரூபாய் நோட்டை ட்ரேயில் வைத்தாள். சில்லரை மாற்றி வருவதற்காக வெயிட்டர் கவுண்டருக்குப் போனான்.
“ஸாரி...” என்றாள் ராதா.
“எதற்கு...?” என்று கேட்டான் கண்ணன்.
“ரொம்ப வெளிப்படையாக நடந்துகிட்டேன் அதுக்கு...”
கண்ணன் பதில் சொல்லவில்லை.
கவுண்டருக்கு எதிரில் நின்றிருந்த கூட்டத்தில் பில் கொடுக்கும் ஆள்கள் நகரட்டும் என்று காத்திருந்த வெயிட்டரை இங்கிருந்தபடியே பார்த்துக்கொண்டு ராதா தொடர்ந்தாள்.
“உங்கிட்டே கதறி அழணும்னு எத்தனையோ சந்தர்ப்பங்கள் எனக்குத் தோணியிருக்கு கண்ணன். எத்தனையோ இரவுகள் உன்னை நினைச்சிக்கிட்டு ஷில்லாங்கிலே தூக்கம் வராமல் புரண்டுக்கிட்டிருந்தேன் கண்ணா... பட், நௌ ஃபீல் ஸாரி...!”
ஏதோ ஒரு அசம்பாவிதமான சூழ்நிலையில், தர்மசங்கடமாகச் சிக்கிக் கொண்டவன்போல் கண்ணன் உட்கார்ந்திருந்தான்.
“நீ என்ன நினைக்கிறேன்னு எனக்குத் தெரியாது. உன் மனசுலே என்னைப் பற்றி இருந்த சித்திரம் அழிஞ்சு போச்சு இல்லே...” அவள் கண்களில் கண்ணீர் துளிர்த்தது. திடீரென்று அவள் குரல் கம்மிற்று.
“கண்ணன் நான் இன்னொருத்தர் மனைவிதான். ஆனால் பேரளவுக்கு மட்டும்தான் மனைவி. கண்ணன்... என் வாழ்க்கை ஒரு பெரிய ஏமாற்றம், கண்ணன்... யூ நோ... நான் ஏன் பி.எட். படிக்க வந்தேன் தெரியுமா? எனக்கொரு போக்கு வேணுமின்னு இல்லே, ஷில்லாங்கிலே தூக்கம் வராத ராத்திரிகள் என்னைத் துரத்த ஆரம்பிச்சபோது எனக்கே என் மேல பயம் வந்திடுத்து கண்ணன்...! மை லைஃப் ஈஸ் கிராண்ட் இல்யூஸன்அவள் திடீரென்று வெடித்து விம்மிக் கொண்டே தன் கைக்குட்டையில் முகம் புதைத்துக் கொண்டாள். [தொடரும்]